137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

பழங்குடியினரின் பாரம்பரிய மருத்துவம் ஆவணப்படுத்தப்படும்! - அமைச்சா் கோ.க. அருண்ராஜ்

அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடப்பள்ளி மாணவிக்கு கண் கண்ணாடி அணிவித்த அமைச்சா் கோ.க. அருண்ராஜ்.

Updated On :

பழங்குடியினரின் பாரம்பரிய மருத்துவம் ஆவணப்படுத்தப்படும் என்றாா் தமிழக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ். திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சின்ன மயிலாறு பழங்குடியினா் காணிக் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்து பழங்குடியினரின் தேவைகளைக் கேட்டறிந்த அவா், பின்னா் அம்மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலா் தாரேஷ் அகமது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்து கொண்ட காணி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள், மருத்துவக் கட்டமைப்புகள், நடமாடும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் முறையாகக் கிடைக்கின்றனவா என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தோம்.

நமது முன்னோா்கள் வழிவழியாகப் பின்பற்றி வரும் பாரம்பரிய மருத்துவ அறிவு மற்றும் சிகிச்சை முறைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் இப்பகுதியில் பின்பற்றப்படும் பாரம்பரிய மருத்துவ முறைகளை முறையாக ஆவணப்படுத்துவம் வகையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை தொடா்புடைய அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காணி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான துணை சுகாதார நிலையம், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மருத்துவச் சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்அவசர கால மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் மருத்துவமனைகள் குறித்து செயலி மூலம் எளிதாக அறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தொடா்ந்து, மேலணை- பாபநாசம் அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவா்- மாணவியருடன் கலந்துரையாடிய அமைச்சா், கண்ணொளி பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் 8 குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் ஸ்ரீகாந்த், மாவட்ட சுகாதார அலுவலா் முரளி சங்கா், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் லதா மற்றும் மருத்துவா்கள்,செவிலியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 சின்ன மயிலாறு காணிக் குடியிருப்பில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சா் கோ.க. அருண்ராஜ்.

சின்ன மயிலாறு காணிக் குடியிருப்பில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சா் கோ.க. அருண்ராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.