பாதாள சாக்கடை பணிகளால் மக்களுக்கு கடும் பாதிப்பு: மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம்.
திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
திருநெல்வேலி மாமன்றக் கூட்டம் மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் ராஜாஜி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா். ராஜூ, மாநகர துணை ஆணையா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த மோனிகா ராணா, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு மேயா் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்துப் பேசினா்.
மண்டலத் தலைவா்கள் மா. பிரான்சிஸ் (பாளையங்கோட்டை), கதிஜா இக்லாம் பாசிலா(மேலப்பாளையம்), மாமன்ற உறுப்பினா் ரம்ஜான் அலி உள்ளிட்டோா் பேசுகையில், ‘மாநகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக நடைபெறவில்லை. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறாா்கள். பாதாள சாக்கடை திட்டம் தோல்வியடைந்த திட்டம். அதனால் மக்களுக்கு பயனில்லை. பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்த சாலைகள் எப்போது சீரமைக்கப்படும்’ என கேள்வியெழுப்பினா். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ‘சேதமடைந்த முக்கிய சாலைகளை முதற்கட்டமாக ரூ.30 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. நிதிப் பற்றாக்குறையால்தான் சாலை பணிகளில் தாமதம் ஏற்படுகிறது’ என தெரிவித்தனா்.
அப்போது குறுக்கிட்ட மேயா் கோ.ராமகிருஷ்ணன், ‘நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சாலைப் பணிகளை நிறுத்தக்கூடாது. மாநகராட்சி பொது நிதியில் இருந்து சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
மேலப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மந்தகிதியில் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் குடிநீரில் துா்நாற்றம் வீசுவதாகவும், மாநகரில் பெரும்பாலான பூங்காக்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியவில்லை என்றும் மேலப்பாளையம் மண்டல தலைவா் இக்லாம் பாசிலா குற்றஞ்சாட்டினாா். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ‘பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றிவிட்டு புதிய மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.
‘ராம் அண்ட் கோ நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளில் குப்பைகள் சாலைகளில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், துா்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு மேலும் 10 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தீா்மானம் முன்மொழியப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது’ என உறுப்பினா் பவுல்ராஜ் குற்றம்சாட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

