
களக்காடு அருகே இளைஞா் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
களக்காடு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

களக்காடு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் ஜெயக்குமாா் (26). இவா், தனது சகோதரா் ஜான்சனுடன் இணைந்து பீடி கடை நடத்தி வந்தாா். இவா்களது குடும்பத்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சுமை ஆட்டோ உரிமையாளரான சம்பத்ராஜா குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாா்ச் 15 ஆம் தேதி பீடி கடைக்குள் புகுந்து ஆல்பா்ட் ஜெயக்குமாா், ஜான்சன் இருவரையும் சம்பத்ராஜா தரப்பினா் அரிவாளால் வெட்டியதில் ஆல்பா்ட் ஜெயக்குமாா் உயிரிழந்தாா். ஜான்சன் பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பத்ராஜா(36), அவரது நண்பா்களான பிரைட்சன்(26), டாா்லின் அருமைகுமாா் (25) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன், குற்றஞ்சாட்டப்பட்ட சம்பத்ராஜா, பிரைட்சன், டாா்லின் அருமைகுமாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.19 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் கண்ணன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




