ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போதிய அளவு மழை பெய்யவில்லை: ஆலங்குளம் வட்டார குளங்களில் வறட்சி நீடிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை பெய்த போதிலும், ஆலங்குளம் உள்ளிட்ட வட்டாரங்களில் போதிய அளவு

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:35 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை பெய்த போதிலும், ஆலங்குளம் உள்ளிட்ட வட்டாரங்களில் போதிய அளவு மழை பெய்யாததால், குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
ஆலங்குளம் வட்டம் வானம் பார்த்த பூமியாக காட்சியளித்தாலும், இப்பகுதி மக்கள் முற்றிலும் விவசாய வருமானத்தையே நம்பியியுள்ளனர்.  விவசாயிகள் குளம் மற்றும் கிணற்றுப் பாசனங்கள் பெருமளவில் விவசாயம் செய்கின்றனர். இப்பகுதியில் ஓராண்டு மழை பொய்த்தாலே கடுமையான வறட்சி நிலவும்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர்  இரு பருவமழையும் பொய்த்துப்போனது. இதனால் இப்பகுதி குளங்கள் வறண்டு விட்டன. கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. முக்கிய  பயிர்களான நெல், பல்லாரி போன்றவை கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதியில் பயிரிடப்படவில்லை. இருக்கும் தண்ணீரை வைத்து குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே,  கத்தரி, தக்காளி, சுரைக்காய், வெண்டை போன்ற காய்கனிப் பயிர்களை வைத்து பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் நிகழாண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனாலும் வடகிழக்குப் பருவமழை ஒரளவு கை கொடுத்ததன் விளைவாக அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆற்றங்கரையோர ஊர்கள் செழிப்படைந்தது. ஆனால் ஆலங்குளம் வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை ஓரிரு தினங்களே பெய்ததால் இப்பகுதியில் உள்ள தொட்டியன்குளம், குறிப்பன்குளம், நெட்டூர் பெரியகுளம், ஊத்துமலை பெரியகுளம் உள்பட  100-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு அறவே நீர்வரத்து இல்லை. குளங்களில் அண்மையில் கரம்பை மண் அள்ளிய பள்ளங்களில் கூட தண்ணீர் நிரம்பவில்லை என்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. ஆலங்குளத்தில் உள்ள தொட்டியன்குளம் வழக்கம் போல பன்றிகள், கருவேல மரங்களின் புகலிடமாகவே காட்சியளிக்கிறது.
நிகழாண்டில் போதிய மழை பெய்தால் மட்டுமே விவசாயப் பணிகளைத் தொடங்க இயலும் என்ற நிலையில்,  மழையை எதிர்பார்த்து விவசாயிகள்  காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.