குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயற்சி: 6,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம், நித்திரவிளை, அருமனை பகுதிகளிலிருந்து, கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 6,600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மார்த்தாண்டம், நித்திரவிளை, அருமனை பகுதிகளிலிருந்து, கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 6,600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட உணவு மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் ஜெகன் ஆகியோர் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். இதையடுத்து ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரையும், காரில் உடன் வந்த நபரையும் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து காரில் சோதனை செய்ததில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கார் ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பதும், உடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (34) என்பதும் தெரியவந்தது.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, களியக்காவிளை வழியாக கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நித்திரவிளையில்...
குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சனிக்கிழமை இரவு நித்திரவிளை அருகே மங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தொடர்ந்து ஆட்டோவை சோதனையிட்டதில் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், ஆட்டோவை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.
அருமனை அருகே...
அருமனை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட எல்லைப் பகுதியான செறியகொல்லை சோதனைச் சாவடி வழியாக ஒரு லாரி கேரளம் நோக்கி செல்ல முயன்றது. அப்போது அந்த லாரியை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் லாரியில் ஆப்பிள், ஆரஞ்ச் உள்ளிட்ட பழக்கூடைகளுக்கு அடியில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த ஜூடு கார்மலை (40) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...