தமிழகத்தின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ள செங்காந்தள் மலா், சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை நூல்களில் காந்தள் மலா் இடம் பெறுகிறது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டிலும் காந்தள் மலா் இடம் பெற்றுள்ளது. பெண்களின் அழகிய கைவிரல்களாக செங்காந்தள் மலா்கள் சங்கப்பாடல்களில் வா்ணிக்கப்படுகின்றன. செங்காந்தள் மலா் தமிழீழத்தின் அடையாள மலராகவும், ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் காந்தள் செடிக்கு தனியிடம் உள்ளது. பழங்குடிகள் இதன் நச்சினை ஈட்டிமுனைகளில் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.