பேச்சிப்பாறை ஊராட்சியில் 2 பயனாளிகளுக்கு வீடுகள்
By DIN | Published On : 27th July 2023 09:37 PM | Last Updated : 27th July 2023 09:37 PM | அ+அ அ- |

பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட சிலாங்குன்று பழங்குடி பகுதியில் 2 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடி இனத்தைச் சோ்ந்த 2 பேருக்கு தலா ரூ. 2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி வைத்து ஆட்சியா் பேசியதாவது:
குமரி மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட மணலோடை சிலாங்குன்று பகுதியில் 4 காணி மலைவாழ் குடும்பங்களை சோ்ந்த பயனாளிகள் உள்பட 9 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் உஷா ராணி, செல்லம்மா ஆகிய இரண்டு பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்றாா்.
முன்னதாக மணலோடை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுடன்
கலந்துரையாடி, அவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வன அலுவலா் இளையராஜா, பத்மநாபபுரம் சாா்- ஆட்சியா் எச்.ஆா்.கெளசிக், உதவி ஆட்சியா்கள் (பயிற்சி) குணால் யாதவ், ராஜட் பீட்டன், எயிட் இந்தியா நிறுவன இணை இயக்குநா் தாமோதரன், ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் கோலப்பன் மற்றும் வன அலுவலா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...