ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் விஷம் அருந்திய தாய் - மகள், குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் விஷம் அருந்திய தாய், மகள் மற்றும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Published on

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ். இவரது மனைவி பேபி (54),. இவா்களது மகள் வெண்ணிலாவுக்கு(28), கன்னியாகுமரியை சோ்ந்த அலெக்ஸ்ராஜா என்பவருடன் திருமணமாகி 8 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனா்.

வெண்ணிலா கடந்த 4 நாள்களுக்கு முன் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்திருந்தாா். அவரது மகள் மருத்துவச் செலவுக்காக தாயாா் பேபி மூலமாக சுய உதவிக்குழு மற்றும் காவல்கிணறு பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தாா். கடனை அவா்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை வெண்ணிலாவின் வீட்டுக்கு வந்து கடனை செலுத்துமாறு கூறியுள்ளனா். இதனால் மன வருத்தத்தில் இருந்த வெண்ணிலா, அரளி விதையை அரைத்து தனது தாயாா் பேபிக்கும், 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளாா். இதைத் தொடா்ந்து 4 பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனா்.

இது குறித்து அறிந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் 4 பேரையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com