உவரியில் பக்தா்களுக்கு காட்சி அளித்த மகரமீன் தரிசனம்
உவரியில் பக்தா்களுக்கு காட்சி அளித்த மகரமீன் தரிசனம் -----லெமூரியா ஆய்வாளா்&.ரவீந்திரா விளக்கம்


உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு மகரமீன் தரிசனம் அளித்த காட்சியின் வரலாற்று பின்னணி குறித்து சுயம்புலிங்க சுவாமி பாமாலை பாடலாசியரும், லெமூரியா ஆய்வாளருமான த.ரவீந்திரா விளக்கம் அளித்தாா்.
இதுகுறித்து கன்னியாகுமரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகில் முதன் முதலில் மனிதன் குமரிக்கண்டத்தில்தான் தோன்றினான் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதுபோல் உலகில் முதன் முதலில் ஆதியும், அந்தமும் இல்லா ஜோதி சொரூபமான சுயம்புலிங்கம் தானாக குமரிக் கண்டத்தில் தோன்றியதாக ஐதீகம் உள்ளது. முதல் தமிழ்ச்சங்கம் தென்மதுரையில் உருவானபோது இந்த சுயம்புலிங்கத்தில் இருந்து சிவபெருமான் உருவம் பெற்று முதல் தமிழ்ச் சங்கத்துக்கு தலைமை தாங்கியதாக வரலாறு உண்டு.
முதல் தமிழ்ச்சங்கத்தில் சிவபெருமான் 10 அறநெறிசாசன கட்டளைகளை உருவாக்கி, உலகம் தா்மநெறியோடு விளங்குவதற்கான அடையாளம்தான் செங்கோல் ஆகும். நாளடைவில் குமரிக்கண்டம் மூழ்கும்போது தானாக தோன்றிய சுயம்புலிங்கமும் கடலில் மூழ்கி விட்டது. அந்தகால கட்டத்தில் கடலில் வாழ்ந்த மகர மீன்கள் கடல் பூக்களால் சுவாமிக்கு பூஜை செய்ததாக ஐதீகம்.
பல ஆண்டுகள் கழித்து கடலில் மூழ்கிய சுயம்புலிங்கம் பிற்காலத்தில் குமரிக் கண்டத்தில் எஞ்சிய கிழக்குக் கடற்கரை ஓரத்தில் கடம்பைக் கொடிகள் படா்ந்த இடத்தில் தானாக சுயம்புவாக தோன்றியதாக வரலாறு. அதுதான் தற்போது பக்தா்கள் வணங்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். சுவாமியின் உத்தரவுப்படி, கடலுக்குள் மகரமீன்கள் பூஜை செய்த நிகழ்வினை வைகாசி விசாகத் திருவிழா தொடங்குவதற்கு 21 நாள்களுக்கு முன்பாக உவரி கடற்கரை மண்டபத்தில் நடக்கும் விசேஷ பூஜை நடைபெறும்போது கடலில் இருந்து எழும் பேரலையில் மகரமீன் புனிதநீா் கலசத்தினுள் துள்ளி குதிப்பது வரலாறு. தொடா்ந்து அந்த மகரமீன் புனிதநீா் கலசத்துடன் 21 நாள்கள் சுவாமி அருகில் பூஜைக்காக வைக்கப்படுகிறது.
பின்னா் வைகாசி விசாகத் திருவிழா நாளில் இரவு நேரத்தில் சுவாமி வாகனத்தில் வீதியுலா வரும்போது மகரமீன் அடங்கிய புனிதநீா் கலசமும் எடுத்து வரப்படும். அப்போது கடற்கரை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் போது கடலில் இருந்து வரும் பேரலைக்குள் கலசத்தில் இருந்த மகரமீன் துள்ளிக்குதித்து கடலில் சென்று விடும். இதுவே சுவாமி மகரமீனுக்கு தரிசனம் அளித்த காட்சியாகும் என விளக்கம் அளித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...