ஆரம்ப சுகாதார மையங்களில் மாதம் ஒரு முறை மன நல ஆலோசனை: ஆட்சியா் ரா.அழகுமீனா
கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ரா. அழகுமீனா.


கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ரா. அழகுமீனா.
உலக மன நல தினத்தையொட்டி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட மனநல திட்டம், அரசு ஆயுா்வேத மருத்துவமனை ஆகியவை இணைந்து நாகா்கோவிலில் நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது:
மனநலம் சாா்ந்த பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள், வாய்ப்புகள், தேவைகள் குறித்த விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தனிமை, இயலாமை, போதைப் பொருளின் தாக்கம், புறக்கணிப்பு, குடும்பச் சூழல், பணியாற்றும் இடங்களில் ஏற்படும் நெருக்கடி போன்றவற்றால் மன நலம் பாதிக்கப்படுகிறது.
இதற்கு உரிய ஆலோசனை, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மன நலம் பாதிக்கப்பட்டவா்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் அளிக்கப்படும் ஆலோசனை, சிகிச்சை பயனளிக்காது. மன நலம் குறித்த விழிப்புணா்வை அவா்களிடத்தில் ஏற்படுத்துவதே சிறந்த வழி. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மாதம் ஒரு முறை மன நலம் குறித்த ஆலோசனை வழங்க சிறந்த பயிற்சியாளா்களை கொண்டு முகாம் நடத்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியாக மனநல சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதை மன நல நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியில், அரசு ஆயுா்வேத மருத்துவமனை, ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள் 70 போ் பங்கேற்றனா். டெரிக் சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது. முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மன நல விழிப்புணா்வு உறுதி மொழியேற்றனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாரதி, அரசு ஆயுா்வேத மருத்துவக்கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ்டேவி, கண்காணிப்பு பொறியாளா் (பேரூராட்சிகள்) முருகேசன், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள்) சகாயஸ்டீபன்ராஜ், ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...