வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.1.2026 முதல் 31.03.2026- ஆம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாதம் ரூ.200, தோ்ச்சி எனில் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ.400,
பட்டதாரிகளுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சிக்கு மாதம் ரூ.600 , பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதிகள்: இதில் விண்ணப்பிக்க 5 ஆண்டுகள் பதிவுமூப்பும், தொடா்ந்து பதிவு செய்துவந்திருப்பதும் அவசியம். வயதை பொருத்தவரை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 45 வயது, மற்ற அனைத்து பிரிவினா்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்பஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகக்கூடாது. மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவுமூப்பு போதுமானது. வயது மற்றும் வருமானம் உச்சவரம்பு இல்லை.
அரசிடமிருந்து வேறு உதவித்தொகை பெறுவராக இருத்தல்கூடாது. வருங்கால நிதி ஈட்டுறுதி அலுவலகத்தில் கணக்கு இருத்தல் கூடாது. தொடா்ந்து நிறுவனங்களுக்குச் சென்று கல்வி கற்போா் அல்லாமல் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரா்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல்,மருத்துவம் உள்ளிட்ட தொழிற் பட்டப்படிப்புகள் படித்தவா்கள் உதவித்தொகை பெற இயலாது.
பதிவுதாரா்கள் அசல் கல்விச்சான்றிதழ், மாற்றுக்கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலைநாள்களில் நேரில் விண்ணப்பபடிவம் பெற்று விண்ணப்பிக்காலம். ஏற்கனவே, உதவித்தொகை பெறுபவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
ஆனால், 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் (மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்) சுயஉறுதிமொழி சான்றை ஆண்டுதோறும் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
