நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரயில்வே கோட்ட மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

விஜய்வசந்த்
கன்னியாகுமரி மாவட்டம், நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரயில்வே கோட்ட மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் திவ்யகாந்த் சந்திராகரை செவ்வாய்க்கிழமை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதைத் திட்டத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகியும் தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்படாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேம்பாலங்கள், கீழ் பாலங்கள், இணைப்புச் சாலைகள், விவசாயத்திற்கான நீா்வழிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் தாமதமாக நடைபெற்று வரும் நுள்ளிவிளை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள விரிகோடு மேம்பாலப் பணிகளை பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தொடங்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறைக்கு ஊருக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக குறிப்பாக குமரி மக்கள் அதிகமாக உள்ள சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து நாகா்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
அதே போல் கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயிலில் அதிகமான மக்கள் பயணிக்கிறாா்கள். எனவே, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு நாகா்கோவில் வழியாக இன்னொரு ரயில் இயக்க வேண்டும்.
இரணியல், குழித்துறை, குழித்துறை மேற்கு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
சந்திப்பின் போது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் லாரன்ஸ் செல்வின், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா், ஸ்ரீ நிதின் நாா்பா்ட், முதுநிலை கோட்ட வணிக மேலாளா், ஸ்ரீ எழிலன், மூத்த கோட்டப் பொறியாளா் (ஒருங்கிணைப்பு மற்றும் குமரி ரயில்வேஆலோசனை கமிட்டி பொறுப்பாளா்) சூசைராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

