குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிடில் அபராதம்: ஆணையா் எச்சரிக்கை!
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்காவிடில் அபராதம் விதிக்கப்படும்.

மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து தேநீரகங்கள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்குவது கட்டாயமாகும். இப்பணியை முறைப்படுத்த ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் எளிதில் தெரியும்படி பச்சை நிறத் தொட்டியில் மக்கும் குப்பைகளையும், சிவப்பு நிறத் தொட்டியில் மக்காத குப்பைகளையும் சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
அதன்பின், பெறப்படும் குப்பைகள் தரம் பிரித்து வழங்காவிடில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது மாநகராட்சி விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சியால் குப்பைகள் சேகரிக்கப்பட மாட்டாது.
மாநகராட்சியின் இந்த அறிவுறுத்தலைக் கட்டாயம் பின்பற்றி, நகரின் தூய்மையைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
2 நிறுவனங்களுக்கு அபராதம்: மாநகராட்சி ஆணையரின், உத்தரவுப்படி, மாநகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தலைமை அஞ்சலகம் அருகே குப்பைகளை தரம் பிரிக்காமல் பொதுஇடங்களில் கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவ்விடம் சுத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

