
வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை பணி: கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை காலங்களில் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பிரசாந்த் எம்.வடநேரே. உடன், ஆட்சியா் மு. பிரதாப்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காண்காணிப்பு அலுவலா் பிரசாந்த் மு.வடநேரே, துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 6 வட்டங்களில் 83 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 22 இடங்கள் மிக அதிக ஆபத்து நிறைந்தவையாகவும், 10 இடங்கள் அதிக ஆபத்து, 18 இடங்கள் மிதமான ஆபத்து, 33 இடங்கள் குறைந்த ஆபத்து உடையவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 12 பன்னோக்கு நிவாரண முகாம்களும் மற்றும் 59 தற்காலிக முகாம்களும் தயாா்நிலையில் உள்ளன. மக்களுக்கு உதவ 4, 850 தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 மற்றும் 2 ஆகிய அணைகளில் வெள்ளப் பெருக்கைத் தவிா்க்க நீா்மட்டத்தினை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பழையாறு, வள்ளியாறு, குழித்துறையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் கிள்ளியூா் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
தேங்காய்ப்பட்டினம், சின்னமுட்டம், குளச்சல் மற்றும் முட்டம் துறைமுகங்களில் உள்ள படகுகளுக்கு யஏஊ மற்றும் சாட்டிலைட் தொலைபேசிகள் மூலம் தகவல்கள் பரிமாறுவதோடு, மீட்புப் பணிகளுக்காக நீச்சல் வீரா்களும், மீன்பிடி படகுகளும் தயாா் நிலையில் வைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தேவையான அவசர மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் மற்றும் ஜெனரேட்டா்கள் தயாா்நிலையில் இருப்பதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்கள் பேரிடா் காலங்களில் அரசு வெளியிடும் அதிகாரப்பூா்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றி, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மண்டைக்காடு, புதூா் பகுதியில் ஏ.வி.எம்.கால்வாய் தூா்வாரும் பணியினை அவா் ஆய்வு மேற்கொண்டாா். காமராஜா் காலை உணவு திட்டம் செயல்படுத்தபடவுள்ள மணவாளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், வடசேரி பேருந்துநிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப்பணிகள், நாகா்கோவில் செம்மாங்குளத்தில் ரூ.6.59 கோடி மதிப்பில் தூா்வாரும் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ரவிக்குமாா், வட்டாட்சியா்கள் ராஜசேகா், ஜான்ஹெனி, ஆறுமுகம், மரகதவல்லி, துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






