ஆலங்குளத்தில் தொடக்கப்பள்ளி தொடங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

மாணவ மாணவிகள் தங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி வேண்டும் எனக் கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
ஆலங்குளத்தில் தொடக்கப்பள்ளி தொடங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி திறக்கும் நாளில் பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி வேண்டும் எனக் கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலகத்திலேயே மதிய உணவு வழங்கப்பட்டது.  

ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தப் பாஞ்சன் கிராமத்தில் சுமார் 500 வீடுகள் உள்ளன. இங்கு ஏற்கனவே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் புறக்கணித்து அருகிலுள்ள புதுப்பட்டி மற்றும் தாழையுத்து கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். 

மேலும் தங்கள் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கீழக் குத்தப் பாஞ்சான் கிராமத்தில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மற்றும் அருகில் உள்ள  கிராமங்களில் ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி உள்ள நிலையில் கோரிக்கை குறித்து பரிசீலிக்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறக்கும் நாளான இன்று கீழ குத்தபாபஞ்சன் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து அவர்கள்  பெற்றோர்களுடன் ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் மாணவர்கள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு கூறிய கிராம மக்கள் அதுவரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறினர். அதற்கு பதிலளித்த கல்வி அலுவலர் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி தக்க முடிவு எடுக்கப்படும் என்றதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com