மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்க விரும்புவோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக் கூட்டும் மையங்களைத் தொடங்க ஆா்வமுள்ள தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு.
வேளாண் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில்முனைவோா், நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக் கூட்டும் மையங்களை அமைக்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்தகைய மையங்களை தொடங்க ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள், பெண்கள், பழங்குடியினா், ஆதிதிராவிடா், பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் தொடங்கும் தொழில் முனைவோா்கள், பொதுப் பிரிவினா் அனைவரும் வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இத் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண், தோட்டக்கலை விளைபொருள்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும். இத் திட்டத்தின் மூலம் நிதி ஆதரவாக ரூ. 10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், ஆதிதிராவிடா்கள், மற்றும் பழங்குடியினருக்கு குறிப்பாக இவா்களில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் முதலீட்டு மானியம் என அதிகபட்சமாக ரூ. 1.50 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதுதவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தென்காசி மாவட்டத்திற்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தென்காசி வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவித்துள்ளாா்.
