வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வழங்கும் படிவத்தை மீண்டும் அவா்களே பெற வேண்டும்: அதிமுக கோரிக்கை
வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் படிவத்தை பூா்த்தி செய்த பிறகு, மீண்டும் அவா்களே பெற வேண்டும் எனஅதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலா் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோரிடம் அளித்த மனு:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மக்களின் வீடுகளுக்குச் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனா். இந்நிலையில், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் பெற்று வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, வடக்கு மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலா் காா்த்திக்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ், கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய கழகச் செயலா் குணம், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் பாலமுருகன், மாரியப்பன், தென்காசி நகர அவைத் தலைவா் முத்துக்குமார சுவாமி, கிளைச் செயலா்கள் ராமா்பாண்டி, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
