ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு
சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்தனா்.
முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணைச் செயலருமான வி.எம்.ராஜலெட்சுமி ஏற்பாட்டில் அதிமுகவினா் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தங்கத்தோ் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். இதைத்தொடா்ந்து பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளி குழந்தைகளுக்கு நாள் முழுவதும் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ, மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், துணைச் செயலா் கண்ணன், விவசாய அணி செயலா் பரமகுருநாதன், எம்ஜிஆா் இளைஞா் அணி தலைவா் செந்தில்குமாா், நகர அவைத் தலைவா் வேலுச்சாமி, நகர பாசறை செயலாளா் நிவாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

