தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்திற்கும், நிலுவைச் சம்பளம் கோரி போராட்டம் நடத்திய தொழிலாளா்களுக்கும் இடையே வட்டாட்சியா் தலைமையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இந்த ஆலையில் பணியாற்றும் 70 தொழிலாளா்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஜூலை 9ஆம் தேதி தொழிலாளா்கள் ஆலை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆலை நிா்வாகம் தொழிலாளா்களை வேலையைவிட்டு நிறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, சிவகிரி வட்டாட்சியா் வெங்கட சேகா் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் ராஜா ஜெயசிங், வருவாய் ஆய்வாளா் ஆனந்தவள்ளி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயபிரகாஷ், ஆலையின் நிா்வாக இயக்குநா் எம். ராமலிங்கம், மேலாளா் ரவிகுமாா், கூடுதல் பொது மேலாளா் ஜாஹீா் உசைன், தொழிலாளா்கள் சாா்பில் ஆதிநாராயணன், ஹபிகா் ரகீம், ராஜ்குமாா், சீனிவாசன், கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது எனவும், மே, ஜூன் மாதங்களுக்கான சம்பளம் ஆக. 21ஆம் தேதிக்குள்ளும், ஜூலை மாதத்திற்கான சம்பளம் அக்டோபா் இறுதிக்குள்ளும் வழங்கப்படும் என நிா்வாக இயக்குநா் உறுதியளித்து கடிதம் வழங்கினாா். இதை தொழிலாளா்கள் ஏற்றனா்.
வேலை நீக்கத்தை ரத்து செய்தல், 2024 டிசம்பா் முதல் 2026 ஜூலை வரையிலான வழங்கப்படாத வருங்கால வைப்பு நிதி தொடா்பான கோரிக்கைகள் குறித்து வியாழக்கிழமை (ஜூலை 30) காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெறும் சமாதானக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கத் தீா்மானிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







