கோயில்களில் 5 மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றும் யோகா பயிற்சியாளர்கள்

சங்கரன்கோவில், ஜூன் 25: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் யோகா, தியானப் பயிற்சி அளித்துவரும் யோகா பயிற்சியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்ல

சங்கரன்கோவில், ஜூன் 25: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் யோகா, தியானப் பயிற்சி அளித்துவரும் யோகா பயிற்சியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

 இதனால் யோகா பயிற்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் பிரசித்திபெற்ற 50 கோயில்களில் யோகா, தியானப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

 இதையடுத்து, இணை ஆணையர் பொறுப்பில் உள்ள 10 கோயில்கள், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள 9 கோயில்கள், உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள 15 கோயில்கள் மற்றும் சட்டப்பிரிவு 46 (111)-ன் கீழ் உள்ள 18 கோயில்கள் என மொத்தம் 52 கோயில்களில் யோகா, தியானப் பயிற்சி நடத்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

 மேலும், இப் பயிற்சியைக் காற்றோட்டமான இடத்தில் நடத்தவும், பயிற்சிபெற வரும் பொதுமக்கள், பக்தர்களுக்கு தரை விரிப்புகள் வழங்கவும், யோகா பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கு கோயில் நிதியிலிருந்து தொகுப்பூதியம் வழங்கவும் கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் முதல்கட்டமாக மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில், பழனி முருகன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட சுமார் 20 கோயில்களில் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து யோகா, தியானப் பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர்.இவர்களில் யாருக்கும் உத்தரவு நகல் வழங்கப்படவில்லை.

 அதன் நகலை அவர்களிடம் காண்பித்துவிட்டு கோயில் நிர்வாகமே வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

 இவர்களைக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி கோயில்களில் இலவச யோகா, தியானப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

 இவர்கள் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை பயிற்சியை நடத்துகின்றனர்.

 குறிப்பாக, சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் முதலில் மிகக் குறைவான எண்ணிக்கையில் யோகாசனப் பயிற்சி தொடங்கப்பட்டது.

 தற்போது 25 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதிகாலை 5.30 மணிக்கே யோகா வகுப்புகளுக்கு வந்துவிடுகின்றனர்.

 இவர்களுக்கு முறையாக யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி ஆகியவற்றை யோகா பயிற்றுநர்கள் அளிக்கின்றனர். உடலுக்கு வலிமையும், உள்ளத்துக்கு வளமையும் சேர்க்கும் யோகாசனத்தைக் கற்றுத்தரும் இந்த யோகா ஆசிரியர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

 மேலும், இவர்களுக்கு எவ்வளவு ஊதியம் என்பது கூட இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

 கடமையுணர்வுடன் செயல்பட்டுவரும் யோகா பயிற்றுநர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com