தென்மாவட்ட காங்கிரஸ் எம்.பி.க்களில் அமைச்சர் யார்?

திருநெல்வேலி, மே 26: நாட்டின் 15-வது மக்களவையில், தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்த
Updated on
1 min read

திருநெல்வேலி, மே 26: நாட்டின் 15-வது மக்களவையில், தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

  திமுக அளித்துள்ளதாகக் கூறப்படும் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் எவரும் இல்லை. எனவே, அந்த வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  முதலாவதாகப் பதவியேற்ற 19 கேபினட் அமைச்சர்களில், தமிழகத்தின் தென்பகுதியின் பிரதிநிதித்துவம் என்ற வகையில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் (சிவகங்கை) மட்டுமே உள்ளார்.

  இப்போது அமைச்சரவையில் சேர திமுக முடிவு செய்து, அதற்கான பட்டியலை காங்கிரஸ் தலைமையிடம் அளித்துள்ளது. அந்தப் பட்டியலில், தென் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மு.க. அழகிரி மட்டுமே உள்ளார்.

  கடந்த முறை, திருச்செந்தூர் (இப்போது தூத்துக்குடி) எம்.பி.யான ராதிகா செல்வி இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அந்த வகையில், கன்னியாகுமரி எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அதுவும் கைநழுவிப் போயுள்ளது.

  காங்கிரஸýக்கு வாய்ப்பு:   இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநெல்வேலி எம்.பி. எஸ். ராமசுப்பு, விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர், திண்டுக்கல் எம்.பி. சித்தன், தேனி எம்.பி. ஆரூண் ஆகியோரில் மாணிக்க தாகூர், ராமசுப்பு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  இவர்களில் மாணிக்க தாகூர், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். விருதுநகரில் போட்டியிடும் வாய்ப்பை ராகுல் மூலம்தான் அவர் பெற்றார்.

  ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே. வாசனின் ஆதரவாளர். அவர் மூலம்தான் ராமசுப்பு வாய்ப்பைப் பெற்றார்.

  இவர்கள் இருவரும் முதல் முறையாக எம்.பி. ஆகியுள்ளனர். இவர்களில் "அரசியல் அனுபவம்' என்ற வகையில், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராமசுப்பு முன்னிலை பெறுகிறார். "மேலிட செல்வாக்கு' என்ற வகையில் மாணிக்க தாகூர் முன்னிலை பெறுகிறார்.

  சாதி ரீதியாகப் பார்த்தால், தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றான நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பு. மாணிக்க தாகூர், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

  அமைச்சர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராமசுப்பு இன்னும் தில்லியில்தான் முகாமிட்டுள்ளார். இணை அமைச்சர்கள் தேர்வுப் பட்டியலில் தனது பெயரும் இருப்பதாக நம்பும் ராமசுப்பு, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

  காங்கிரஸ் தரப்பிலான அமைச்சர்கள் தேர்வுப் பட்டியலை சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை இரவு பரிசீலித்து இறுதி செய்ய உள்ளதாக ராமசுப்பு ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதில் தென் மாவட்டங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com