2.69 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

திருநெல்வேலி மாவட்டத்தில், 2.69 லட்சம் குழந்தைகளுக்கு வரும் 20-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில், 2.69 லட்சம் குழந்தைகளுக்கு வரும் 20-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இம்மாதம் 20-ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.   கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர்

சி. சமயமூர்த்தி பேசியதாவது:

5 வயதுக்குள்ட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இந்தாண்டு ஜன. 20 மற்றும் பிப். 24 ஆகிய தேதிகளில் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 2,69,559 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக 1,650 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவற்றில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள், சமூக நலத்துறை, சத்துணவு பணியாளர்கள்,  வருவாய்த்துறை, கல்வித்துறை, ரோட்டரி, அரிமா சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், சுயஉதவிக் குழுவினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள் கூடும் இடங்களாகிய பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

இதற்கு முன்பு எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.  சிறு வியாதிகளான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப் போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.  எக்காரணம் கொண்டும் சொட்டு மருந்து கொடுக்காமல் இருக்கக்கூடாது.

போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ கிருமிகள் பரவுவதை தடுத்து போலியோ நோய் இல்லை என்ற நிலையை இந்தியாவில் உருவாக்க முடியும்.

இந்த முகாம்கள் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் எம். கிருஷ்ணன், துணை இயக்குநர்கள் உமா, கிருஷ்ணலீலா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் அ. மதிமாறன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் கல்லூர் இ. வேலாயுதம் (மானூர்), ப. பானுமதி (கடையநல்லூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com