களைகட்டியது தசரா பக்தர்களின் ஆடை, அணிகலன்கள் விற்பனை

மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்று விளங்கும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் ஆடை, அணிகலன்களின் விற்பனை களை கட்டியுள்ளது.
Updated on
2 min read

மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்று விளங்கும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் ஆடை, அணிகலன்களின் விற்பனை களை கட்டியுள்ளது.

நவராத்திரி பண்டிகையானது கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழாவாக பத்து நாள்கள் கொண்டாடப்படும். இதேபோல, தென் மாநிலங்களில் தசரா கொண்டாடப்படும் முக்கியப் பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் உள்ளது. இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா விழா, தமிழக அளவில் பிரசித்தி பெற்றது.

இயற்கையாவே அமைந்த துறைமுகக் கரையில் கடல் அலை தாலாட்டும் முகத்துவாரத்தில், ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சுயம்பு வடிவாய், சிவசக்தி சமேதராய் காட்சியளிக்கின்றனர். இக் கோவிலில் சுவாமியும், அம்மனும் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து அருள் பாலிக்கும் வகையில் உள்ளது சிறப்புக்குரியது. அம்மை நோய் கண்டவர்களும், பிள்ளை வரம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் அவை நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு நடைபெறும் தசரா விழாவுக்காக பக்தர்கள் தங்களது உருவத்தை மாற்றிக் கொண்டு வலம் வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தெய்வங்களைப் போன்று வேடம் தரித்து, அதற்கான ஆபரணங்கள், அணிகலன்களை அணிந்து தசரா நாள்களில் வீதியெங்கும் வலம் வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்துக்கு செல்வது உண்டு. இவர்கள் அனைவரும் நேர்த்திக்கடன் ஆடைகளை அந்தந்தப் பகுதி சந்தைகளில் தேர்வு செய்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருநெல்வேலி நகரப் பகுதியில் உள்ள கடைகளே சிறந்த தேர்வாக உள்ளது. இந்தக் கடைகளில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வகைகளில் ஆடைகளும், அணிகலன்களும் வந்துள்ளன. சூலாயுதம், வேல், வாள், அரிவாள், ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் பல்வேறு ரகங்களில் வந்து குவிந்துள்ளன. பாசி மாலைகளும் பல வகைகளில் உள்ளன. ஒரு வயது குழந்தை தொடங்கி முதியவர் வரை ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருமே வேடம் தரிப்பது வழக்கம். எனவே, குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள், முதியோர் என அவரவர்களுக்கு தகுந்தபடி பல்வேறு விதமான உருவங்களும், ஆடைகளும், அணிகலன்களும் விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்தபட்சமாக ரூ.500 தொடங்கி அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரையிலும் உருவங்கள் மற்றும் ஆடைகளின் விலை உள்ளது.

கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த தசரா பக்தர் ஆறுமும் கூறியது: நானும், எனது 5 வயது மகனும் இந்தாண்டு வேடம் தரித்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளோம். ஆண்டுதோறும் விதவிதமான வடிவங்களில் வேடங்கள் வருகின்றன. பிளாஸ்டிக், அட்டை, காகிதக் கூழ், சணல் பை, வண்ணத் துணிகள் என அதன் தயாரிப்புக்கு தகுந்த விலை உள்ளது. என்ன விலையாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட வேடத்தை அணிய கொடுத்துத்தான் ஆக வேண்டியுள்ளது என்றார்.
திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த வியாபாரி முருகேசன் கூறுகையில், அக்.1ஆம் தேதி தொடங்கி அக்.12ஆம் தேதி வரையில் தசரா பக்தர்களுக்கான பொருள்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்; ஆண்டில் ஒரு மாதத்தில் மட்டுமே நடைபெறும் வியாபாரம் என்பதால் அந்தந்த சூழலுக்கு தகுந்து விலை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.

தசரா சந்தையையும் ஆக்கிரமித்தது சீனா!
எத்தனை அரிய தயாரிப்பாக இருந்தாலும் அவற்றுக்கு ஈடாக அதேபோன்ற தோற்றத்தில் போலியை உருவாக்கி சந்தைப்படுத்துவதில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொலைக்காட்சி கார்ட்டூன் தொடங்கி அன்றாட உபயோகப் பொருள்கள் அனைத்திலும் சீனா ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இப்போது, தசரா சந்தை யையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. பக்தர்கள் அணியும் எலும்புக்கூடு மாலை, பல்வேறு வகை முகமூடி, வண்ண வண்ண முடிகள், ஒளிரும் விளக்குகளுடன் கூடிய தலைக் கொம்பு, பூத உடை, விலங்குகளின் உருவம் என அனைத்து உருவங்களையும் பிளாஸ்டிக் மற்றும் நைலான் ரக பொருள்களாக வடிவமைத்து அனுப்பியுள்ளது சீனா. வட மாநில வியாபாரிகள் மூலம் இந்தியா முழுவதும் தசரா பொருள்களின் சந்தைக்குள் நுழைந்துள்ளது சீனா. ஆனால், இதர சீன பொருள்களைப் போன்று விலை குறைவாக இல்லை. குறைந்தது ரூ.500 என்ற விலை உள்ளது. இத்தகைய பொருள்கள் தசரா பக்தர்களையும் கவர்ந்துள்ளதால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com