திருநெல்வேலி மாநகரில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளைஞர் உள்பட இருவர் இறந்தனர்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (27). கூலி வேலை செய்து வந்தார். இவர், மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லி மணல்மேட்டில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சுத்தமல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
முதியவர் சாவு: பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சித்து (73). கூலித் தொழிலாளி. இவர் பிரதான சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார்.
திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
மயங்கி விழுந்து சாவு: பாளையங்கோட்டை மகராஜ நகரைச் சேர்ந்தவர் ராஜா (80). உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடைக்கு செல்வதற்காக வெளியே சென்றாராம். அப்போது வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜா, அங்கு இறந்தார். பாளை. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.