இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

நெல்லையில் சுதந்திர தினம்: ரூ.50 லட்சம் நலஉதவிகள்

திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசியக்கொடியேற்றிய பின்பு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசியக்கொடியேற்றிய பின்பு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகவும் உற்சாகத்தோடு புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசியக்கொடியேற்றினார். அதன்பின்பு காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றார்.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் கி.லட்சுமிகாந்தன் பாரதி, சிறப்பு தியாக ஓய்வூதியம் பெறும் எஸ்.தாயம்மாள், மொழிக்காவலர் ஓய்வூதியம் பெறும் முத்துசாமி, சீ.செல்லையா ஆகியோருக்கு ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 54 பேருக்கும், ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 9 பேருக்கும் நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.வருவாய்த்துறையில் விபத்து மற்றும் குற்றச்சாட்டுகளின்றி பணியாற்றிய 3 ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 15 வீரர்-வீராங்கனைகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கி பாராட்டினார். 
முன்னாள் படைவீரர் நல வாரியத்தின் மூலம் 4 பேருக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.86 ஆயிரத்து 400 மதிப்பில் 5 பேருக்கு சக்கரநாற்காலிகளும், 5 பேருக்கு மடிக்கணினிகளும் வழங்கப்ப்டடன. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 230 மதிப்பில் 13 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 515 மதிப்பில் 50 பேருக்கும், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.8 ஆயிரத்து 75 மதிப்பில் 2 பேருக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் 2 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 
சமூக நலத்துறையின் மூலம் ரூ.20 ஆயிரத்து 377 மதிப்பில் 5 பேருக்கும், ரூ.2.61 லட்சம் மதிப்பில் 4 பேருக்கும், மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் 11 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிக்கான ஆணைகளும் என மொத்தம் 243 பேருக்கு ரூ.49 லட்சத்து 98 ஆயிரத்து 483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.  தொடர்ந்து சங்கர்நகர் கென்பிரிட்ஜ் பப்ளிக் பள்ளி, அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி, தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி நகரம் கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார், மாநகர காவல் ஆணையர் மகேந்திரசிங் ரத்தோட், காவல் துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து), சுகுணசிங் (சட்டம்-ஒழுங்கு), சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், பயிற்சி ஆட்சியர் சுகபுத்ரா, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, கோட்டாட்சித் தலைவர் மைதிலி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன், துணை முதல்வர் ரேவதிபாலன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில்...
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 72-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
   இதில்,  பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர், பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில்  தேசியக் கொடியேற்றி, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய அவர், " நம் நாடு சுதந்திரத்திற்காக கடந்து வந்த பாதையையும், சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும், தியாககிகளையும் நினைவு கூறினார். மேலும் அவர்கள்  பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் பாதுகாக்க வேண்டும்.  நாட்டில் உள்ள அனைவரும் அவரவர் துறை சார்ந்த பகுதியில் புதிய முயற்சிகளையும் சாதனைகளையும் புரிந்திட வேண்டும். கல்வி, ஆராய்ச்சி, சுயதொழில் போன்ற அனைத்து துறைகளிலும் மாணவர்கள் சாதனை படைத்திட வேண்டும்' என்றார் அவர். 
பல்கலைக்கழக பதிவாளர்  சந்தோஷ் பாபு  முன்னிலை வகித்தார். சிறப்பு நிகழ்வாக பல்கலைக்கழக துறை மற்றும்  பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவியரின்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், தேர்வாணையர்,  நிதி அலுவலர், தொலைநெறி கல்வி இயக்குநர், பல்வேறு துறைகளின் இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
 ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்   ராஜலிங்கம் செய்திருந்தார் . இளைஞர் நலத் துறை இயக்குநர் (பொ) வெளியப்பன் நன்றியுரை கூறினார். 
சதக்கத்துல்லாஹ்: பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா  கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தேசியக் கொடியேற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் முகைதீன்,  அரசு உதவி பெறா பாடப்பிரிவின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இவ்விழாவில் பாளையங்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நீதிமன்றக் கிளை மேலாளர் நெ. பொன்னுகுட்டி, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புலவர் வை. ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் தேசிய அளவில் சாதனை புரிந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  
ஸ்காட்: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர்  சி.கே.ரவிசங்கர் தேசியக் கொடியேற்றினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
   சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு தலைமையாசிரியர் கோமதி நாயகம் தலைமை வகித்தார். 2017-18ஆம் கல்வி ஆண்டில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 10,11மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழாசிரியை வள்ளியம்மாள் நன்றி கூறினார்.  விழாவில் மாணவ-மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திரதின சிறப்பு குறித்து உரையாற்றினர்.


இந்தியன் வங்கியில்...
பாளையங்கோட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தினம் மற்றும் 112-ஆவது வங்கி நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியன் வங்கி 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதை நினைவுகூரும் வகையில் சுதந்திர தினத்துடன் வங்கி நிறுவன தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு மண்டல மேலாளர்  சி.ஆர்.கோபிகிருஷ்ணன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினார். இதில், துணை மண்டல மேலாளர் சுதாகரன், உதவி பொது மேலாளர் வெங்கடரமணா, இந்தியன் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.