பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

"பொது நூலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துவது அவசியம்'

அறிவியல் வளர்ச்சியால் உருவாகியுள்ள தொடுதிரைகள் மூலம் உரையாடல்களையும், வாசிப்பும் குறைத்துவிட்ட சூழலில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:50 am

DIN

அறிவியல் வளர்ச்சியால் உருவாகியுள்ள தொடுதிரைகள் மூலம் உரையாடல்களையும், வாசிப்பும் குறைத்துவிட்ட சூழலில், பொதுநூலக இயக்கத்தைச் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம். அப்போது சாமானியர்களிடமும் நல்நூல்களின் கருத்துகள் சென்றடையும் என்றார் எழுத்தாளர் ரவிக்குமார்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அவர் ஞாயிற்றுக்கிழமை பேசியது: "அறிவியலின் வளர்ச்சியால் தொடுதிரை காலத்தில் வந்து நிற்கிறோம். அம்பேத்கர், காரல்மார்க்ஸ் போன்ற அறிஞர்களின் கருத்துக்களை இன்றைய மின்நூல்களால் எளிதாகப் படிக்க முடிகிறது. அறிவைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை, விரல் நுனியிலேயே உள்ளது என்றாகியுள்ளது. 
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களின் நூல்கள் கிடைப்பதற்கு அரிதாக இருந்தன. லத்தீன் அமெரிக்க நூல்கள் மிகவும் தேடப்படும் நூல்களாக இருந்தன. ஆனால், அத்தகையச் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அதேநேரத்தில் ஒரு சிறந்த புத்தகம் படித்தேன் என்பதைவிட ஒரு சிறந்த புத்தகம் என்னிடத்தில் இருக்கிறது என்பதையே பெருமையாகச் சொல்வதை இப்போது காண முடிகிறது. 
இன்றைய மின்நூல்களில் வாசிக்கலாம். அது மனதின் ஆழம் வரைச் சென்று அகவயப்படுவதில்லை. தொடுதிரையால் வாசிப்பின் நேரம் குறைந்துள்ளது. உரையால்கள் குறைந்துவிட்டன. குடும்ப உறவுகளில்கூட தொலைத்தொடர்பு வளர்ச்சி இடைவெளியை அதிகப்படுத்திவிட்ட சூழலே உள்ளது.
தற்போது, நம் பண்பாட்டைப் பற்றிய உள்ளீடற்ற சமூதாயம் உருவாகி வருகிறது. தொலைத்தொடர்பு வளர்ச்சியின் மூலம் அவர்களுக்கு அறிவை ஊற்றுவது சிரமமாகியுள்ளது. அதேநேரத்தில் அறியாமையை, வெறுப்பை, நஞ்சை எளிதாக ஊற்ற முடிகிறது. எதிர்கால தலைமுறையினர் வன்முறைக் கருவியாக மாறிவிடாமல் இருக்க புத்தக வாசிப்புக்கு ஊக்கப்படுத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொது நூலகங்களைச் செம்மைப்படுத்தினால், சாமானிய மக்களிடம் நூல்களை எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும்' என்றார் அவர்.
அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்: சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியது: "புத்தகத் திருவிழாக்கள் பண்பாட்டு இயக்கமாகவும், எல்லோரும் இழுக்கும் தேராகவும் தொடர வேண்டும். புத்தகத்தை நேசிக்கும், பரவலாக்கும் முயற்சிகள் வரவேற்கத்தகுந்தவை. உலகில் கல்வெட்டுகள் அதிகளவில் கிடைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு சுமார் 1 லட்சம் கல்வெட்டுகள் கிடைத்துள்ள நிலையில், அவற்றில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தமிழ் எழுத்துகளால் ஆனவை. அரசர்களால் கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றிருந்தாலும், சாமானிய மக்களின் பயன்பாட்டுப் பொருளான மண்ஓடுகளிலும் பழங்கால தமிழ் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பழங்கால பெண் கவிஞர்கள் மிகவும் குறைவு. ஆனால், தமிழ்மொழியின் சங்ககாலத்தில் மட்டுமே 47 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். பாலின பேதமற்ற அறிவு பரவலாக்கம் தமிழர்களிடம் இருந்துள்ளது. உருவம், பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உயிரினங்கள் தனது அடுத்தத் தலைமுறைக்குத் தரும் வகையில் இயற்கை வழிசெய்கிறது. அறிவை மட்டும் அவ்வாறு கடத்த முடிவதில்லை. அதற்காக மனிதன் கண்டுபிடித்தவையே புத்தகங்கள். நமது முன்னோர்களின் சிந்தனை, அறிவு ஆகியவற்றை அவர்களின் எழுத்துகள் மூலம் அறிந்து உயர புத்தகங்கள் உதவுகின்றன. கடல், கடற்கரை நகரங்கள், கடல் வணிகத்தை சிறப்பாக எடுத்துரைக்கும் பழங்கால நூல் சிலப்பதிகாரம் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழர்களின் ஒவ்வொரு சொலவடைக்குள்ளும் பல்வேறு அறிவியல், வரலாற்றுத் தகவல்கள் பொதிந்துள்ளன. அதனை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துக்கூற வாசிப்பை அதிகரிக்க வேண்டும்' என்றார் அவர்.
முன்னதாக தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் ஒயிலாட்டம் நடைபெற்றது. சொற்பொழிவு நிகழ்ச்சியில் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் வரவேற்றார். மகளிர் திட்ட அலுவலர் ஹெட்சி லீமா அமலின் வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர்கள் கிருஷி, தேன்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சிவகாசி மு.ராமச்சந்திரன் தலைமையில், "மனிதகுல மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அறிவா? அன்பா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.