மூன்றாவது சீசன் சங்கர் சிமென்ட் - தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர், திருநெல்வேலியில் புதன்கிழமை (ஜூலை 11) தொடங்குகிறது. முதல்ஆட்டத்தில் திண்டுக்கல்- திருச்சி அணிகள் மோதுகின்றன.
இது தொடர்பாக டிஎன்பிஎல் தலைமைச் செயலதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எட்டு அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இறுதி ஆட்டம் உள்பட 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகின்றன. திருநெல்வேலி, திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலியில் சங்கர் நகர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்திலும், திண்டுக்கல்லில் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்திலும், சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் போட்டி நடைபெறுகிறது.
இத்தொடரில் காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அதனால் அந்த அணிகளின் பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணிகள் முறையே ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்ற பெயரில் களம் காணுகின்றன. இதுதவிர, வி.பி.திருவள்ளூர் அணியின் பெயர், வி.பி.காஞ்சி வீரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளது.
தினந்தோறும் இரவு 7.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரு ஆட்டங்கள் நடைபெறுவதால், பிற்பகல் 3.15 மணிக்கு ஓர் ஆட்டமும், இரவு 7.15 மணிக்கு மற்றொரு ஆட்டமும் தொடங்கும்.
ரூ.1 கோடி பரிசு: இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், இரண்டாவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.