திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்ததால் காய்கனிகள் தேக்கமடைந்துள்ளன. இதேபோல வெளிமாவட்ட காய்கனிகள் வரத்து தடைபட்டுள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்; ஏழை-எளிய மக்களைப் பாதிக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும்; மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்ததால் இம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்து 700 லாரிகள் கடந்த மூன்று நாள்களாக இயக்கப்படவில்லை. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளதோடு, கட்டுமானம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருள்கள் ஏற்றுமதி-இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
காய்கனிகள் தேக்கம்: இதுகுறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியது: அரிசி, சர்க்கரை, பருப்பு உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களும் லாரிகள் மூலமே வேறு இடங்களுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளின் புதிய வழிமுறைகள், வரிவிதிப்புகளால் மோட்டார் தொழிலை செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ரயில்கள் மற்றும் விமான சேவைகள் அதிகரிப்பு, சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி பணியில் போக்குவரத்து துறைக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இந்தச் சூழலில் பெட்ரோல் விலை அதிகரிப்பு, காப்பீட்டு கட்டண அதிகரிப்பு ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாறிவிட்டது. இதனை குறைக்க பலமுறை முறையிட்டும் பலனில்லாததால் வேலைநிறுத்த ஆயுதத்தை எடுத்துள்ளோம். இதன்மூலம் எங்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
பல்லாரி, வெண்டை, பூசணி, தடியங்காய், மல்லிகை, சிமென்ட், பித்தளை பொருள்கள் உள்ளிட்டவை கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருநெல்வேலியில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்படும். அதேபோல மரத்தடிகள், கேரட், பீட்ரூட், கோதுமை, அரிசி, பாமாயில் உள்ளிட்டவை அதிகளவில் இம் மாவட்டத்திற்கு வந்து சேரும். தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இம் மாவட்டத்திற்கு வந்து செல்லும். அவை அனைத்தும் தடைபட்டுள்ளதால் மூன்று நாள்களில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தடியங்காய், பூசணிக்காய், மல்லிகை உள்ளிட்டவை அதிகம் தேங்கியுள்ளதாலும், அவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் இல்லாததாலும் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது. மேலும், திங்கள்கிழமை முதல் காய்கனிகள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
தீர்வு காண வேண்டும்: திருநெல்வேலியில் தங்கியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் சிலர் கூறுகையில், லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக திருநெல்வேலி மாவட்ட தொழிற்சாலைகளில் சரக்குகளை இறக்கிவிட்டு இங்கேயே தங்கியுள்ளோம். மோட்டார் வாகன உதிரிபாகங்கள், காற்றாலை மற்றும் மின்சாதன பொருள்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவை மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப்பிரதேசம் பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு வருகின்றன. வெகுதொலைவுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணங்கள் பெரும் சுமையாக உள்ளன. ஆகவே, மத்திய அரசு எங்களது கோரிக்கையை உடனே பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







