/

அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளை முன்னிட்டு சுற்றுலாத் தலமான அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.  

Updated On :21 மே 2018, 2:08 am

விடுமுறை நாளை முன்னிட்டு சுற்றுலாத் தலமான அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.  
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு,  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு குறிப்பாக நீர்நிலைகளைத் தேடி குடும்பத்தினருடன் செல்கின்றனர். 
திருநெல்வேலி மாவட்டத்தின் வற்றாத அருவியான அகஸ்தியர் அருவி மற்றும்  மணிமுத்தாறு அருவிக்கும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் சென்று குதூகலமடைந்தனர். 
திருநெல்வேலி மற்றும் அண்டை மாவட்டங்களிலிலிருந்து மட்டுமன்றி சென்னை,  தஞ்சாவூர்,  திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதல் குவியத் தொடங்கினர்.
 அகஸ்தியர் அருவி மற்றும் அருவியின் அருகில் உள்ள சிறு தடாகத்தில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.  காவலர்கள், வனத்துறையினர் பாதுகாப்பு போதிய அளவில் இல்லாததால் இளைஞர்கள் அருவியின் மேல் பகுதிக்கு சென்று ஆபத்தான இடத்தில் குளித்தனர். 
மேலும் அருவிக்குச் செல்லும் நடைபாதை சீரமைக்கப்படாததால் முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துடன் அதை தாண்டி அருவி பகுதிக்கு சென்றனர்.  
அருவியில் குளிப்பவர்கள் கட்டுப்பாட்டை மீறி ஷாம்பு, சோப்பு போட்டுக் குளிப்பதாலும், பாலிதீன், ஷாம்பு பாக்கெட்டுகள், பழைய துணிகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதாலும் அருவி கரைப் பகுதிகள் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,  அருவியில் நுழைவுக் கட்டணம் பெற்று சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.  மேலும் தற்போது சூழல் சுற்றுலா என்ற  திட்டத்தைத் தொடங்கி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல திட்டங்களை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அகஸ்தியர் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை  மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் செய்துத் தரப்படவில்லை.  மேலும் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் பாலிதீன், ஷாம்பு பாக்கெட்டுகள்,  துணிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல் அங்கேயே தீ வைத்து எரிக்கின்றனர்.   இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது  என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.