கழிப்பறை இல்லை; தண்டனை உண்டு: மாநகராட்சி நடவடிக்கையால் பொதுமக்கள் அதிருப்தி
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தாமல், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்


திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தாமல், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சியின் செயலால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் நெல்லையப்பர் கோயில் எதிர்புறம் மட்டுமே மாநகராட்சி சார்பில் கட்டணக் கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டணக் கழிப்பறைகளும் தூய்மையாக இல்லாமல், துர்நாற்றம் வீசுகிறது. அதேநேரத்தில் வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் கழிப்பறை வசதிகளே இல்லை.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள மனகாவலம்பிள்ளை மருத்துவமனை அருகே சிறுநீர் கழித்த 27 பேருக்கு பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறி தலா ரூ.10 அபராதம் விதித்தது மாநகராட்சி நிர்வாகம். அந்தப் பகுதியில் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ள நிலையில், சிறுநீர் கழிக்கக் கூடாது என எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைத்தபிறகு தொடர்ந்து சிறுநீர் கழித்ததாலேயே அபராதம் விதித்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவது மாநகராட்சியின் கடமையாகும். ஆனால், அதை செய்யாமல் அபராதம் மட்டும் விதிப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிக்கு 40 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. அதனால் பொதுமக்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, அபராதம் விதிப்பதை கைவிட்டுவிட்டு கழிப்பறை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
நீண்டகால கோரிக்கை: இதேபோல், வண்ணார்பேட்டை பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டும் என்பது திருநெல்வேலி மாநகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மதுரையில் இருந்து திருநெல்வேலி வருபவர்கள் சுமார் 3 மணி நேர பயணத்திற்கு பிறகு வண்ணார்பேட்டையை வந்தடைகிறார்கள். அங்கு கழிப்பறை இல்லாததால் சாலையின் ஓரங்களில் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்கிறார்கள். இதில், பெண்களின் நிலையோ மிகவும் பரிதாபம். வீடு செல்லும் வரை இயற்கை உபாதைகளை அடக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவதிப்படுகின்றனர்.
இதேபோல் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 82 ரயில்கள் வந்து செல்கின்றன. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் போதுமான கழிப்பறைகள் இல்லை. திருநெல்வேலி சந்திப்பிலும் குறைவான கட்டணக் கழிப்பறைகளே உள்ளன. அதுவும் பராமரிப்பின்றி உள்ளதால், ரயில் நிலையம் எதிரிலேயே சிறுநீர் கழித்துவிட்டுச் செல்கிறார்கள். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
மக்களைக் காக்கும் நடவடிக்கை இல்லை: இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் கூறியதாவது: டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நேரத்தில் பொதுமக்களை அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது என மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நிர்பந்திக்கிறது.
ஆனால், அரசின் கட்டமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நிலவேம்புக் குடிநீர் பருக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மக்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், மக்களை காக்கும் நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டது.
கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், அதற்காக சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாநகரை எடுத்துக் கொண்டால் திருநெல்வேலி நகரத்தில் நான்கு ரதவீதிகளிலும் கழிப்பறை வசதிகளே இல்லை. வண்ணார்பேட்டையிலும் கழிப்பறை வசதி கிடையாது. ஒருசில இடங்களில் இருக்கும் கழிப்பறைகள் மிக மோசமாக உள்ளன. கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தாமல், பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு அபராதம் விதித்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, நகரின் முக்கிய பகுதிகளில் இலவச கழிப்பறைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத் துறை அனுமதி மறுப்பு: பாஜக கிழக்கு மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ் கூறியதாவது: வண்ணார்பேட்டைக்கு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். அங்கு கழிப்பறை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக போராடி வருகிறோம். வண்ணார்பேட்டையில் கழிப்பறை அமைக்க நெடுஞ்சாலைத் துறை அனுமதி மறுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கழிப்பறை வசதி ஏற்படுத்தாமல், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதித்தால் அது கண்டிக்கத்தக்கது என்றார்.
திருநெல்வேலி மாநகரம் முழுவதும் போதிய கழிப்பறை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முடிந்தளவுக்கு இலவச கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தாமல் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை மாநகராட்சி நிர்வாகம் உணர வேண்டிய தருணம் இது.
மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை
இதுதொடர்பாக மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமாரை தொடர்புகொண்டபோது, அவர் செல்லிடப்பேசி அழைப்பை ஏற்கவில்லை. எஸ்.எம்.எஸ். மூலம் அவரின் கருத்தை அறிய முற்பட்டபோதும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...