பெண்ணின் இதயத்தில் இருந்த 100 கிராம் எடை கொண்ட கட்டியை அகற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.எம்.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வெட்டும்பெருமாள் மனைவி ஞானசெல்வம் (58). இவர் மூச்சுத் திணறல் காரணமாக மூன்று மாதங்கள் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மூச்சுத் திணறல் அதிகமானதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய இதயத்தின் இடது ஆரிக்கிளில் 100 கிராம் எடை கொண்ட கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் மார்வின் மனோபாய்லஸ், அருள்விஜய்குமார், மயக்கவியல் மருத்துவர் அமுதராணி, முத்துசுவாமி, முத்துராஜ், ஞானவேல்ராஜன், செண்பகராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், ஞானசெல்வத்தின் இதயத்தில் இருந்த 100 கிராம் எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் இதயத்தில் இருந்து கட்டி அகற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடைபெற்றது. இதற்காக ஒரு மணி நேரம் இதயம் செயலிழக்கச் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இதயம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது. ஞானசெல்வம் இப்போது நலமாக இருக்கிறார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் காசிராஜனின் (11) இதயத்தில் இருந்த துவாரம் அறுவை சிகிச்சை மூலம் அடைக்கப்பட்டுள்ளது. இப்போது அவரும் நலமாக உள்ளார்.
இதுவரையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இதயத்தில் உள்ள துவாரத்தை சரி செய்வதற்காக அதிகளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அது பிறவிக் குறைபாடாகும். இந்த மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான இயந்திரங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இயந்திரங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். அவை வந்தவுடன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் 100 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு முடிந்துள்ளது. விரைவில் அனுமதிக் கடிதம் வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் கட்டப்பட்டு வரும் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதன் திறப்பு விழா தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.
அப்போது துணை முதல்வர் ரேவதி பாலன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









