வறட்சியின் பிடியில் வெட்டுவான்குளம், சிறுக்கன்குறிச்சி சுற்று வட்டார கிராமங்கள்
திருநெல்வேலி மாவட்டம் சிறுக்கன்குறிச்சி, வெட்டுவான்குளம், வெள்ளாளன்குளம் சுற்று வட்டார கிராமங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.


தண்ணீரின்றி கருகிய வாழை, காய்கறிபயிர்கள்
திருநெல்வேலி மாவட்டம் சிறுக்கன்குறிச்சி, வெட்டுவான்குளம், வெள்ளாளன்குளம் சுற்று வட்டார கிராமங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பருவ மழையின்றி குளங்கள் வறண்டதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கிணறுகள் வற்றும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வாழை உள்ளிட்ட பயிர்கள் காய்க்கும் நேரத்தில் கருகி வருகின்றன.
மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளாளன்குளம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், முத்தன்குளம், வெட்டுவான்குளம், வடுகன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நெல், வாழை, தக்காளி, வெண்டை, கத்தரி, பருத்தி, பூக்கள் உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டு வருகின்றன. கோடைகாலங்களில் பார்க்கும் திசையெல்லாம் பசுமையாகக் காணப்படும் இக்கிராமங்கள், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. மழை இல்லாததால் அங்குள்ள குளங்கள் அனைத்தும் வறண்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து சில கிணறுகள் வற்றிவிட்டன. எஞ்சிய கிணறுகளில் நீர் மட்டம் மிக ஆழத்தில் சென்றுவிட்டது. இதனால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் அப்பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
வெட்டுவான்குளம், வடுகன்பட்டி, காங்கேயன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழைகள் குலை தள்ளும் தருணத்தில் தண்ணீரின்றி கருகி சாய்ந்து வருகின்றன. சில இடங்களில் தீவனத்துக்காக பயிரிட்ட சோள நாற்றுகளைக்கூட காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கருகிய வாழைகள்: இது தொடர்பாக வெட்டுவான்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறியது: கடந்த ஆண்டு ஏப்ரலில் 400 சக்கை வாழைகள், 600 நாட்டு வாழைகள் என மொத்தம் 1,000 வாழைகள் பயிரிட்டேன். வரப்பு வெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்திருக்கிறேன். ஆனால் பருவ மழை இல்லாததால் கிணறு வறண்டது. இதனால் 15 நாள்களுக்கு ஒரு முறை வாழைக்கு பாய்ச்சி வந்த தண்ணீரை, 25 நாள்களுக்கு ஒரு முறை பாய்ச்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அதுவும் பக்கத்து கிணற்றில் இருந்து 1 மணி நேரத்திற்கு ரூ.50 கொடுத்து தண்ணீர் பாய்ச்சினோம். ஆனாலும் போதிய தண்ணீர் கிடைக்காததால், 500-க்கும் மேற்பட்ட வாழைகள் கருகிவிட்டன. சில வாழைகள் ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் குலை தள்ளவில்லை. குலை தள்ளிய வாழைகளிலும் தண்ணீர் பற்றாக்குறையால் காய்கள் வெம்பிவிட்டன.
இங்கு ஆடு, மாடுகளுக்கும் தண்ணீர் இல்லை. இதனால் ஆடு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆலங்குளம், மாறாந்தை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுதவிர தென்னை, மா மரங்களும் கருக ஆரம்பித்துள்ளன. இதே நிலை தொடருமானால் ஏராளமான மரங்கள் அழியும் அபாயம் உள்ளது. காங்கேயன்குளம், வடுகன்பட்டி பகுதிகளிலும் ஏராளமான வாழைகள் கருகியுள்ளன. அரசு இழப்பீடு வழங்கினால் மிகப்பெரிய இழப்பிலிருந்து நாங்கள் தப்பிக்க முடியும் என்றார்.
ரூ.2 லட்சம் இழப்பு: சிறுக்கன்குறிச்சி பகுதியிலும் வாழைகள் மட்டுமன்றி, தக்காளி, வெண்டை, கத்தரி, பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அருணாசலம் கூறியதாவது:
நான் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி, வெண்டை, கத்தரி, பூக்கள் பயிர் செய்துள்ளேன். கடுமையான வெயில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெரும் வறட்சியை எதிர்கொண்டுள்ளோம். என்னுடைய தோட்டத்தில் உள்ள இரண்டு கிணறுகளில் ஒன்று முற்றிலுமாக வற்றிவிட்டது. மற்றொன்றிலும் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாக தக்காளி, வெண்டை ஆகியவை காய்க்கும் தருணத்தில் கருகிவிட்டன. அடுத்ததாக கத்தரி செடிக்கும் போதிய அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகிறேன். அதனால் கத்தரி செடியில் உள்ள காய்கள் அனைத்தும் வெம்பி வருகின்றன.
கோடை மழை பெய்திருந்தால் இந்தப் பயிர்களை காப்பாற்றியிருக்கலாம். இனி கோடை மழை பெய்தாலும் எந்தப் பலனும் இல்லை. இந்த ஆண்டு காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
கருகும் பனை மரங்கள்!
சிறுக்கன்குறிச்சி விவசாயி அருணாசலம் கூறுகையில், "கடந்த காலங்களில் நிறைய வறட்சியை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் தற்போதைய அளவுக்கு வறட்சியை சந்தித்ததில்லை. இதற்கு முந்தைய வறட்சியின்போது தென்னை மரங்கள் கருகியதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது கடுமையான வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பனை மரங்களே கருக ஆரம்பித்துள்ளன. எங்கள் பகுதி காடுகளில் உள்ள பனை மரங்கள் கருகி வருவதை மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...