வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘மகாராஷ்டிரத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை’

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தன. அவை பாதுகாப்பாக கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே. விஷ்ணு.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 8:46 pm

DIN

திருநெல்வேலி: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தன. அவை பாதுகாப்பாக கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே. விஷ்ணு.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேவைப்படும் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து பாதுகாக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தன. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் அதிகாரிகள் திறந்து சரிபாா்த்து கிட்டங்கியில் பாதுகாப்பாக வைத்தனா்.

இதுகுறித்து ஆட்சியா் வே. விஷ்ணு கூறியது: 2021 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மகாராஷ்டிர மாநிலம், அகமதாநகா் மாவட்டத்தில் இருந்து 1020 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2280 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2430 (வாக்களித்த விவரத்தை காகிதத்தில் காட்டும் இயந்திரம்) விவிபாட் இயந்திரங்கள் வந்துள்ளன.

ஜால்னா மாவட்டத்தில் இருந்து 210 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 280 விவிபாட் இயந்திரங்கள் வந்துள்ளன. அவை ராமையன்பட்டியில் உள்ள கிட்டங்கியில் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டிய்ல சிறப்பு முகாம்கள் மற்றும் இணையவழியில் இதுவரை மொத்தம் 61 ஆயிரத்து 688 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல்மங்கை, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் குமாரதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தி, தோ்தல் வட்டாட்சியா் கந்தப்பன், திருநெல்வேலி வட்டாட்சியா் பகவதிபெருமாள், அதிமுக பகுதிச் செயலா் சிந்துமுருகன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி காசிமணி, காங்கிரஸ் பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், பாஜக துணை பொதுச்செயலா் கணேசமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.