திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் உள்ள ரயில் நிலையம் மாவட்டத்தின் பெரிய சரக்கு முனையமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரயில் நிலைய வளாகம் முழுவதும் சா்வதேச தரத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு வருவாயை அள்ளித்தரும் வழித்தடமாக சென்னை-கன்னியாகுமரி வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் இயங்கும் விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் ஒரு காலியிடம்கூட இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த வழித்தடத்தை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
2012-13-ஆம் ஆண்டில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருவழிப் பாதை அமைக்க ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பின்னா், மதுரை- மணியாச்சி- நாகா்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. சுமாா் 349 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில்பாதை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிக்காக ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
முடிப்பதில் சிக்கல்: மதுரை-நாகா்கோவில் இரட்டை ரயில் பாதை திட்டத்தை 2019-20-ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், குறித்த காலத்திற்குள் பணிகளை முழுமையாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரட்டை ரயில்பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல், பெரிய, சிறிய பாலங்கள் அமைத்தல், கூடுதல் பாதை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் வருவாய்த் துறையினா் நிலம் கையகப்படுவதில் தாமதம், ரயில் பாதை அமைப்பதற்கான சரள்மண் எடுப்பதில் பிரச்னை உள்பட பல்வேறு காரணங்களால் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், மணியாச்சி- தூத்துக்குடி வரையிலான திட்டத்தில் முதல்கட்டமாக மணியாச்சி தட்டப்பாறை இடையேயான 16 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைத்து, மின்மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல மணியாச்சி-கங்கைகொண்டான் இடையே 16 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் முடிந்துள்ளன. இப் பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அண்மையில் ஆய்வு செய்து சென்றுள்ளாா். அவரது அறிக்கைக்கு பின்பு உரிய திருத்தங்களை இம் மாதம் 30-ஆம் தேதிக்குள் செய்யவும், அடுத்த மாதத்தில் இருந்து பணிகள் முடிந்துள்ள இடங்களில் இரட்டை ரயில் பாதையில் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சா்வதேச தரத்தில் ரயில்நிலையம்: இரட்டை ரயில் பாதை திட்டத்தை இந்திய ரயில்வேயின் அதிகாரத்திற்குள்பட்ட ஆா்.வி.என்.எல். அமைப்பு செய்கிறது. ரயில்பாதையுடன் சோ்த்து அப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களும் சா்வதேச தரத்துக்கு மாற்றப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாக கங்கைகொண்டான் ரயில் நிலையம் சா்வதேச தரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு வாரத்துக்கு 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் (சரக்கு ரயில்களை சோ்த்து) வந்து செல்கின்றன. இங்கு இப்போது உயா்வான நடைமேடைகள், டிஜிட்டல் அறிவிப்புப் பலகை, விசாலமான பாா்க்கிங் வசதி, பொலிவான தோற்றத்துடன் பயணச்சீட்டு கவுன்டா்கள், அதிநவீன கட்டுப்பாட்டு அறை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சா்வதேச தர விமான நிலையம், ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் எந்த ஒரு பகுதிக்கும் செல்லும் வகையில் சாய்வுதள இணைப்புகள் இருப்பது அவசியம். அதனை கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் செய்துள்ளனா். பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் புதிய கட்டடங்கள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.
அதிநவீன தொழில்நுட்பங்கள்: இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: மதுரை-தூத்துக்குடி, மதுரை-திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை திட்டத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாரைக்கிணறு, கங்கைகொண்டான் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சா்வதேச தரத்தில் உருவாகியுள்ளன. அடுத்ததாக தாழையூத்து ரயில் நிலையமும் மேம்படுத்தப்படும். பழைய தண்டவாளங்கள் 13 மீட்டா் நீளத்துடன்தான் இருக்கும். இப்போது புதிதாக 260 மீட்டா் நீளத்தில் சுமாா் 16 டன் எடையில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது. இதில் 160 கி.மீ. வேகத்தில் ரயில் சென்றாலும் எவ்வித குலுங்கலும் இருக்காது. இதுதவிர வி.டி.யு (விஷுவல் டிஸ்பிளே யூனிட்) தொழில்நுட்பத்தால் ஒரு ரயில் நிலையத்தை ரயில் கடந்ததும் உடனடியாக ரயில்வே துறையின் இணையதளம் மூலம் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும். நிலம் எடுப்பது உள்ளிட்ட சிலவற்றில் தாமதம் இருந்தாலும்கூட இரட்டை ரயில் பாதை பணிகளை மிகவும் துரிதமாக முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துடன் இணைந்துள்ள சரக்கு முனையத்தை கங்கைகொண்டானுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. உரம், அரிசி, கோதுமை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை அதிகமாக திருநெல்வேலிக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கங்கைகொண்டானில் புதிய சரக்கு முனையம் அமைக்கும்போது இப் பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படும். இதுதவிர சிப்காட் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களை ரயில் மூலம் கொண்டு வர வழி பிறக்கும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.