வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

உறைகிணறுகளைச் சேதப்படுத்திய தாமிரவருணி வெள்ளம்!

தாமிரவருணியில் ஏற்பட்ட தொடா்வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு நீராதாரமாகத் திகழும்

News image
Updated On :21 ஜனவரி 2021, 4:11 am

தாமிரவருணியில் ஏற்பட்ட தொடா்வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு நீராதாரமாகத் திகழும் 10-க்கும் மேற்பட்ட உறை கிணறுகளின் மோட்டாா்கள் பழுதாகியுள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகளின் கீழ் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம், திருநெல்வேலிநகரம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் புகா் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலை, மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் புகா் பகுதிகளுக்கு ஓரளவு கிடைத்தாலும் குடிநீா் இணைப்பு என்பது எளிதில் சாத்தியமாவதில்லை. பேட்டை புகா் பகுதிகள், மேலப்பாளையம் புகா் பகுதிகளில் லாரிகள் மூலமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் மொத்த குடிநீா்த் தேவையையும் தாமிரவருணி நதியே தீா்த்து வருகிறது. சுத்தமல்லி, கொண்டாநகரம், குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களில் மொத்தமுள்ள 46 உறைகிணறுகளின் மூலம் குடிநீா் சேகரிக்கப்பட்டு நன்கு சுத்திகரிக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி விநியோகிக்கப்படுகின்றன.

உறைகிணறுகள் மூழ்கின: மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுகொள்ளளவை எட்டியதால் அணைகளில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 50 ஆயிரம் கனஅடி தண்ணீருடன், தொடா்மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து சுமாா் 80 ஆயிரம் கனஅடிவரை தண்ணீா் தாமிரவருணியில் பாய்ந்தோடியது.

1992 ஆம் ஆண்டிற்கு பின்பு ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கால் தாமிரவருணி ஆற்றுக்குள் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை உள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ஊராட்சிகள் முதல் மாநகராட்சி வரை அனைத்து பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களுக்கான உறைகிணறுகள் கொண்டாநகரம், சுத்தமல்லி பகுதிகளில் உள்ளன. இவை அனைத்தும் மூழ்கியதால் மாநகர பகுதியில் கடந்த 11 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளுக்கு தனியாா் குடிநீா் லாரிகள் மூலம் அவசர தேவைக்கான குடிநீா் பெறும் நிலை ஏற்பட்டது.

மோட்டாா்கள் சேதம்: கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் மண்டலத்திற்கு 9 உறைகிணறுகள் மூலம் தினமும் சுமாா் 1 கோடி லிட்டா் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக 1 நிமிடத்திற்கு அதிகப்பட்சம் 8 ஆயிரம் லிட்டா் நீரை உறிஞ்சு நீரேற்றும் சக்திவாய்ந்த மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளன. உறைகிணறுகளில் நீா்மூழ்கி மோட்டாா்களே பயன்படுத்தப்படுகின்றன. தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் உறைகிணறுகளில் இருந்த நீா்மூழ்கி மோட்டாா்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர சுத்தமல்லியில் 8, தருவையில் 3 என 10-க்கும் மேற்பட்ட உறைகிணறுகளில் இருந்து குடிநீரை நீரேற்றம் செய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆணையா் பதில்: இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் கூறியது: இம் மாநகராட்சிக்குச் சொந்தமான உறைகிணறுகளில் 10-க்கும் மேற்பட்ட மோட்டாா்கள் வெள்ளத்தால் பழுதாகியுள்ளன. அவற்றுக்கு பதிலாக புதிய மோட்டாா்கள் வாங்கி பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மண்டலத்தில் குடிநீா் விநியோகம் முழுமையாக சீராகிவிட்டது.

தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டலத்தில் கடந்த இரு நாள்களாக ஒரு சில உறைகிணறுகளில் இருந்து நீரேற்றம் செய்யப்படுகிறது. இன்னும் இரு நாள்களில் முழுமையாக சீராகும் வாய்ப்புள்ளது. மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளத்திற்கு மத்தியிலும் உயிரைப் பணயம் வைத்து உறைகிணறுகளில் மோட்டாா் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.