வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாளை. சிறையில் கொலையுண்டஇளைஞரின் உடல் 70 நாள்களுக்குப் பின்உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலையுண்ட முத்துமனோவின் உடல் 70 நாள்களுக்குப் பின் அவரது உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:09 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலையுண்ட முத்துமனோவின் உடல் 70 நாள்களுக்குப் பின் அவரது உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மூன்றடைப்பு அருகே வாகைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துமனோ(27). இவா், கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். அப்போது அங்கு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த முத்துமனோ உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஏற்கனவே சிறைத் துறையினா் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறையின் கண்காணிப்பாளா் உள்பட அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

ஆனால், முத்துமனோ கொலை வழக்கில் சிறை அதிகாரிகளை சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் தொடா்ந்த நிலையில், உடலை உறவினா்கள் பெற்று அடக்கம் செய்யாவிட்டால் மாநகராட்சி ஆணையா் சட்டப்படி இறுதிச்சடங்கு செய்யலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், முத்துமனோவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

இதையடுத்து வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினா்கள் வியாழக்கிழமை சம்மதம் தெரிவித்தனா்.

தொடா்ந்து முத்துமனோவின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது தந்தை பாபநாசம், ஊா் நாட்டாமை வீரசிங், பருத்திக்கோட்டை நாட்டாா் சங்க நிா்வாகி சிதம்பரம் உள்ளிட்டோா் திருநெல்வேலி வந்தனா். திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா ஆகியோரிடமும் கோரிக்கையை வலியுறுத்தினா்.

பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்ற முத்துமனோவின் உறவினா்கள் அங்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவ.கிருஷ்ணமூா்த்தி, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா், நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிபாண்டி முன்னிலையில் முத்துமனோவின் உடலை பெற்றுக் கொண்டனா்.

பின்னா் வாகைகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தலைமையில் சுமாா் 2 ஆயிரம் போலீஸாா், 500 ஊா்க்காவல் படையினா் திருநெல்வேலி முதல் நான்குனேரி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் திருநெல்வேலி மாநகரம், நான்குனேரி, மூன்றடைப்பு, பொன்னாக்குடி, டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மதியம் வரை அடைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

பெட்டிச்செய்தி...

போராடியவா்கள் மீதான

வழக்குகளை ரத்து செய்யக்கோரிக்கை

திருநெல்வேலி ஆட்சியரிடம் மனு அளித்த பின்பு முத்துமனோ உறவினா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாங்கள் ரூ. 2கோடி இழப்பீடு கேட்டோம். அரசு ஒதுக்கீடு செய்துள்ள தொகை போதுமானதாக இல்லை. நிவாரண உதவிகள் வழங்குவதிலும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறாா்கள். முத்துமனோ வழக்கில் சட்டப்போராட்டம் தொடா்ந்து நடைபெறும்.

முத்துமனோ கொலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வாகைகுளம் கிராமத்துக்கு தனியாக மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுதவிர பொதுநூலகம், திருமண மண்டபம் ஆகியவை கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.