காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
இந்திய அரசியலில் அனுபவம் வாய்ந்த பொதுவுடைமைத் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலருமான டி.ராஜா, அந்த இயக்கத்தின் ஆளுமைமிக்க முகமாக விளங்கி வருபவர்.
தனது சித்தாந்த தெளிவு, மார்க்சிய கோட்பாட்டுக்கான அறிவுசார் பங்களிப்புகள் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களின் உரிமைகள் மீதான தளராத கவனம் போன்றவற்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுபவர். தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தினமணிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அதிலிருந்து....
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் எப்படி உள்ளது?
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. எதிரணி அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக என்று பிளவுபட்டுள்ளது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் பாஜக, தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுகவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. பாஜகவை நம்பி எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு, அதிமுகவுக்கு பெரும் வீழ்ச்சியையே தரும்.
தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு அறிவிக்கும் இலவசங்களை உங்களுடைய கட்சி ஆதரிக்கிறதா?
மக்கள் நலத் திட்டங்களை "இலவச கலாசாரம்' எனச் சிறுமைப்படுத்துவது தவறு. கல்வி, மகளிர் உரிமை மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் இத்தகைய முன்முயற்சிகள் மிக அவசியமானவை. தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி வெளியிடும் போட்டி அறிவிப்புகளின் பின்னணியில் உள்ள தந்திரத்தை மக்கள் நன்கு அறிவர்.
ஆளும் திமுக மீது மக்களின் மனநிலை என்ன? களத்தில் நிலைமையை ஆய்வு செய்தீர்களா?
பொதுவாகவே ஐந்து ஆண்டு ஆட்சியின் முடிவில் சில குறைபாடுகள் அங்குமிங்குமாக எழுவது இயல்பு. அவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதுதான் முக்கியம். குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதை அரசு தீர்த்து வைக்கிறது என்ற உணர்வு மக்களிடம் உள்ளதை நேரில் பார்த்து வருகிறேன்.
திமுக,காங்கிரஸ் இடையே நிலவும் நெருடலான உறவு குறித்து...
புதுச்சேரியில் தமிழகத்தில் ஏற்பட்டது போன்ற மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளின் அணி உருவாகி இருக்க வேண்டும் . அந்த முயற்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. ஆனால், தொகுதிப் பங்கீடு என்று வரும்போது, காங்கிரஸ், திமுக இடையே சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போதுமானதா?
தொகுதிப் பங்கீடு குறித்து மாநிலத் தலைமை முடிவெடுத்து, தொகுதி உடன்பாடு கையொப்பமாகி, தொகுதிகளும் முடிவாகிவிட்டன. இப்போது களத்தில் பாஜக மற்றும் அதிமுகவை முறியடிப்பதுதான் முக்கிய நோக்கம்.
நடிகர் விஜய்யின் வருகையால் திமுக, அதிமுக கூட்டணிகளின் வாக்குகள் எந்தளவு பாதிக்கப்படும்?
அரசியல்வாதி விஜய்யை எனக்கு அதிகம் தெரியாது. சினிமா கலைஞனாக அவரை அறிந்திருக்கிறேன். அவரது அரசியல் என்ன, அவரை பின்னால் இருந்து வழிநடத்துவது யார்? அவர்களுடைய கொள்கை என்ன? என்பது புதிராகவே இருக்கிறது. திமுகவை ஆதரிக்கும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு கொள்கை, குறிக்கோள்கள் இருக்கின்றன. தேசத்தை ஹிந்துத்துவமயமாக்கி சநாதன கொள்கைகளை மையப்படுத்த பாஜக விரும்புகிறது. அதற்கு அதிமுக துணைபோகிறது. ஆனால், தவெக அதன் கொள்கைகள் என்ன என்பதை இதுவரை சரியாக விளக்கவில்லை.
பலமுனைப் போட்டியால் தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை வருமா?
போட்டி என எடுத்துக்கொண்டால் அது திமுக அணி, அதிமுக அணிக்கு இடையில்தான். மக்களும் அந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். நான் அறிந்தவரை அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக களத்தில் முன்னணியில் திமுக அணி இருப்பதால் தொங்கு பேரவை ஏற்படாது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் அதிகரிப்பதாகவும், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் சுணக்கம் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே...
தற்போதைய மாநில அரசு இயன்றவரை பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடப்பதை வைத்து, ஒட்டுமொத்த சமூக அமைப்பும் அதற்கு காரணம் எனக் கூறக் கூடாது. இந்த சமுதாய அமைப்பை நாம்தான் மாற்றியமைக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசுக்கு எதிரான அலை உள்ளதா?
எதிர் அலை என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால் பாஜக, அதிமுகவுக்கு ஆதரவான அலை நிச்சயமாக இல்லை. திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு ஆதரவான அலையே வீசி வருகிறது.
மேற்கு வங்கம் ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. அங்கு மீண்டும் இடதுசாரிகள் வலுப்பெறுவார்களா?
மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சியினர் மாநிலத்தின் அரசியல் போக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சி பெறுவது அவசியம் என்ற உணர்வோடு களத்தில் பணியாற்றுகின்றனர். நிச்சயமாக அதற்கு பலன் கிடைக்கும்.
அஸ்ஸாமில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அங்கு இழந்த செல்வாக்கை மீட்கவும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காகவும் போராடி உள்ளோம். அஸ்ஸôம் வரலாற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்தத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிடுகிறோம். மக்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நேர்காணல்: ஆண்டன் ஜவஹர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் முன்னுரிமை: இந்திய கம்யூனிஸ்ட்

ஐ.நா சபை செய்வதறியாது தவிக்கிறது: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. ராஜா

6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீா்மானம்!

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் இடம் இல்லை என்பது நியாயமல்ல: பெ. சண்முகம்
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

