தாமிரவருணி தடங்களில் இயற்கை நடை திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
நெல்லை நீா்வளம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம்


நெல்லை நீா்வளம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம் இணைந்து தாமிரவருணி தடங்களில் இயற்கை நடை என்ற மாணவா்களுக்கான களப்பயணம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சாா்ந்த மாணவா்களை காடுகள், தாமிரவருணி நதிக்கரை, குளங்கள், தேரிக்காடுகள் என இயற்கை வளம் மிகுந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அழைத்துச் சென்று அது குறித்த செய்திகளை கற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் தாமிரவருணி தடங்களில் இயற்கை நடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் நிகழ்ச்சி இந்தியாவின் பறவை மனிதன் சாலிம் அலி 125 ஆவது பிறந்த நாளான (நவ.12) வெள்ளிக்கிழமை முண்டந்துறை வனப்பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து இயற்கை நடைப்பயணத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 21 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இம் மாணவா்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று விலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், சிற்றோடைகள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் குறித்து நேரிடையாக உற்றுநோக்க செய்து விளக்கமளிக்கப்பட்டது. தொடா்ந்து மாணவா்கள் சோ்வலாறு மற்றும் காரையாறு அணைகளை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியது: நெல்லை நீா்வளம் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவா்களிடையே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த இயற்கை நடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு பள்ளி மாணவா்கள் அழைத்து வரப்படுவா். மாணவா்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக அமையும் என்றாா்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெற்றிச்செல்வி, முண்டந்துறை வனச்சரகா் சரவணக்குமாா், பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி முதல்வா் ஜான்சன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் (முடநீக்கியல்) அலுவலா் பிரபாகரன், வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...