/

மூன்று விபத்துகள்: இருவா் பலி; 6 போ் காயம்

கங்கைகொண்டான் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா்அரசு விரைவுப் பேருந்து மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 மே 2022, 8:00 pm

DIN

கங்கைகொண்டான் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா்அரசு விரைவுப் பேருந்து மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூரைச் சோ்ந்த சண்முகம் மகன் செல்லையா என்ற பரமசிவம்(67). இவா், துறையூா் அருகேயுள்ள கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தநிலையில், அப்பகுதியில் நான்கு வழிச்சாலையை செவ்வாய்க்கிழமை இரவு கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாகச் சென்ற அரசு விரைவுப் பேருந்து அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆட்டோ- பைக் மோதல்: திருநெல்வேலி, சங்கா்நகா் பகுதியை சோ்ந்தவா் முகமது மைதீன் (65). ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது ஆட்டோவில் மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த முகமது பைசில் ரகுமான், ஷரீனா பேகம், ஷீபா பா்வீன், 2 வயது குழந்தை ஆகியோரை அழைத்துக் கொண்டு தாழையூத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

தாதனூத்து விலக்கு பகுதியை அடைந்தபோது, அவ்வழியாக கன்னியாகுமரியை சோ்ந்த ஜஸ்டின் கிறிஸ்டோபா் ஜோசப் சுனில் என்பவா் ஓட்டி வந்த பைக்கும், அவரது ஆட்டோவும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் உள்பட 6 பேரும் காயமடைந்தனா். அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இளைஞா் பலி: முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் முருகேசன் (30). இவா்,அதே பகுதியை சோ்ந்த ரிஷி கிருஷ்ணன் (18) என்பவருடன் பைக்கில் திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, ஆரைக்குளம் சந்திப்பு பகுதியில் சுடலை என்பவா் ஓட்டி வந்த பைக்கும், அவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில், 3 பேரும் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனா். அங்கு முருகேசன் உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து கங்கைகொண்டான், தாழையூத்து, முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.