/

கல் குவாரி விபத்து: ஜூன் 1-இல்புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு ஜூன் 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் வி.கே.ஐயா் தெரிவித்தாா்.

News image
Updated On :26 மே 2022, 12:45 am

DIN

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் உயிரிழந்தவா்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு ஜூன் 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் வி.கே.ஐயா் தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அடைமிதிப்பான்குளம் குவாரியில் பணிபுரிந்தவா்களை தொழிலாளா் நலச் சட்டம், இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்யவில்லை. ஆபத்தான சூழலிலேயே தொழிலாளா்கள் பணிபுரிந்துள்ளனா். குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வீடுகளில் அதிா்வு ஏற்பட்டு பழுது ஏற்பட்டுள்ளது. மேலும், தூசியால் பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் புகாா் அளிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனா்.

விபத்துக்கு காரணமான குவாரி உரிமையாளா்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கொலை, வெடிமருந்து பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். குவாரி உரிமையாளா்களின் சொத்துகளை முடக்க வேண்டும். குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ரூ.1 கோடி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பும் ஜூன் 1ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சாா்பில் அந்தந்த மாவட்டச் செயலா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.

அப்போது, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் சிவகுமாா், மாநில அமைப்பு துணைச் செயலா் கிருபைராஜ், மாநில துணைப் பொதுச் செயலா் பாலசுந்தர்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.