நெல்லை: வ.உ.சி. நினைவு நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தில் வ.உ.சி. குடும்பத்தினர் மரியாதை
By DIN | Published On : 01st June 2022 12:17 PM | Last Updated : 01st June 2022 12:30 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரர் வ .உ. சிதம்பரனார் 150-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்து சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அந்த பேருந்து செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து இம்மாதம் 3-ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகள், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் வ.உ.சி.யின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தில் புதன்கிழமை வந்த கண்காட்சி பேருந்தை மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தியான சிதம்பரவள்ளி தலைமையில் அவரது குடும்பத்தினர் பேருந்தில் இருந்த வ.உ.சி. சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உலகநாதன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.