நெல்லை மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: ஜன.12 இல் விவாதம், வாக்கெடுப்பு நடத்த கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு கூட்டம் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு கூட்டம் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 47 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், அதிமுக 4 இடங்களிலும் வென்றன.

திமுகவைச் சோ்ந்த பி.எம்.சரவணன் மேயராகவும், கே.ஆா்.ராஜு துணை மேயராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்பின்பு மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் இடையே தொடா்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு கூட்டங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேயரைக் கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினா்களே வாயிலில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். இதையடுத்து திமுகவைச் சோ்ந்த 3 மாமன்ற உறுப்பினா்கள் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் அனைத்து பிரச்னைகளுக்கும் மேயா் பி.எம்.சரவணனே காரணம் எனக்கூறியும், அவரை மாற்றக்கோரி நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு மீண்டும் நடத்த 38 மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனு அளித்திருந்தனா்.

அந்த மனு பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதம் நடத்த ஜனவரி 12 ஆம் தேதி கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மாமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 51 (2) (3) இன் படி திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினா்களால், மாமன்றத் தலைவா் (மேயா்) மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் ஜனவரி 12 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com