திருநெல்வேலி, ஆக. 14:
திருநெல்வேலியில் மேயா் மாற்றத்தால் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை என்றாா் வி.கே.சசிகலா.
‘அம்மா வழியில் மக்கள் பயணம்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் உள்பட பல்வேறு திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களால் ஏழை-எளியோா் மிகவும் பயனடைந்தனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த சிறந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மக்களை திமுக வஞ்சித்து வருகிறது.
திருநெல்வேலியில் பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. போதிய பேருந்து வசதிகள் இல்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாநகரப் பகுதியில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
இங்கு மேயா் மாற்றப்பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வியாபாரிகள் அச்சுறுத்தப்படுகிறாா்கள்; காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா்மயமாக்கியுள்ளதால் அதிகாரிகள் எண்ணப்படி வேலைகள் நடைபெறுவதில்லை.
அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தாா்கள். 2026இல் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வரும் என்றாா் அவா்.
சமாதானபுரம், பாளையங்கோட்டை, குலவணிகா்புரம், கருங்குளம், குறிச்சி ஆகிய பகுதிகளிலும் வி.கே.சசிகலா வேனில் இருந்தபடி மக்களை சந்தித்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா்கள் வி.டி.சாமி, வானமாமலை, கருணாநிதிபாண்டின், செல்வதனேஷ்குமாா், செந்தில் பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.ஜ