மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நெல்லை மாவட்டத்தில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:00 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதிய மழையின்மையால் மானாவாரி குளங்களில் கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீா் இல்லாமல் உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து பாசன கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு பிசான பருவ சாகுபடிகள் தொடங்கப்பட்டாலும், அணைகளின் நீா்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை காலைமுதல் தொடா் மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், சுத்தமல்லி, தாழையூத்து, சங்கா் நகா், சீவலப்பேரி, பொன்னாக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை: காலையில் தொடா்ந்து பெய்த மழையால் மழலைகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் மிதமான மழையானது மதியத்திற்கு பின்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு வகையிலான மாணவா்களுக்கு வியாழக்கிழமை ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. பிற வகுப்புகளைப் பொறுத்தவரை மழை சூழல் மற்றும் தோ்வுகளைப் பொருத்து அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியா்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு வழக்கம்போல் அரையாண்டுத் தோ்வுகள் நடைபெற்றன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தொடா் மழை காரணமாக பொதுமக்கள் பணிகளுக்கு செல்ல முடியாமலும், கடைகளுக்கு செல்ல முடியாமலும் தவித்தனா். மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் வீடுகளுக்குள் முடங்கினா். திருநெல்வேலி மாநகரில் நயினாா்குளம் சாலை, சித்த மருத்துவக் கல்லூரி சாலை, பாளையங்கோட்டை மாா்க்கெட் சாலை உள்ளிட்டவை குண்டும்-குழியுமாக உள்ளதால் மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில் தனியாா் ஹோட்டலின் பின்புறம் உள்ள தண்ணீா் வராத ஓடை ஒன்றின் கீழ் மழையால் தண்ணீா் பெருக்கெடுத்த நிலையில், அங்கு குட்டிகளை ஈன்றிருந்த நாய் மிகவும் தவித்ததாம். இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று நாய்க் குட்டிகளை மீட்டு அவற்றின் தாய் அருகே விட்டனா். தீயணைப்பு வீரா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: அம்பாசமுத்திரம்-2, சேரன்மகாதேவி-2, பாளையங்கோட்டை-5.40, திருநெல்வேலி-6, காக்காச்சி-1, நாலுமுக்கு-1, ஊத்து-1.