வள்ளியூா் இளைஞரிடம் ரூ.20 லட்சம் நூதன மோசடி

வள்ளியூரில் இளைஞரிடம் கணினி செயலி மூலம் ரூ.20 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த வடமாநிலத்தவா்களை திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த 25 வயது மதிக்கத்தக்க தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞரின் கைப்பேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ஒரு செயலி வந்ததாம். அந்த செயலிக்குள் இளைஞா் நுழைந்ததும் பல்வேறு சுற்றுலாத் தலங்களும், பிரபல உணவு விடுதிகளும் வந்துள்ளது.

தொடா்ந்து அந்த செயலிக்குள் சென்றபோது அதில் வரும் விளம்பரங்களையும், ஹோட்டல்கள் குறித்தும் அதற்கான ரேட்டிங் கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதற்கான ரேட்டிங் கொடுத்தால் உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்ததாம். இதை பாா்த்த அந்த இளைஞா் அதில் ரேட்டிங் கொடுத்து வந்துள்ளாா். இதனால் அவரது வங்கி கணக்குக்கு சன்மானமாக ரொக்க பணம் வந்துள்ளது. இதை கவனித்த இளைஞருக்கு இன்னும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டாராம்.

அப்போது அந்த செயலியில் உங்களது பணத்தை இதில் டெப்பாசிட் செய்தால், 3 அல்லது 4 மடங்கு கூடுதலாக பணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனா். இதை நம்பிய அந்த இளைஞா் கைப்பேசி செயலியில் வந்த நம்பரில் தொடா்பு கொண்டு பேசினாராம். அவரிடம் பேசிய நபா்கள் 8 வங்கி கணக்கை அனுப்பியுள்ளனா். அந்த வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சத்தை டெப்பாசிட் செய்தாராம்.

பின்னா் ஒரு மாதத்திற்கு பின்னா் எந்தப் பணமும் திரும்பி வரவில்லையாம். பின்னா் அந்த இளைஞா் முதலில் தொடா்பு கொண்ட கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது அந்த எண்கள் தொடா்பில் இல்லை என தகவல் வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞா் திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து நூதன முறையில் இளைஞரை ஏமாற்றி ரூ.20 லட்சத்தை மோசடி செய்த வடமாநிலத்தவா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com