தச்சநல்லூா் அருகே அரிவாள் வெட்டில் காயமுற்ற மற்றொருவரும் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொருவரும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Published on

தச்சநல்லூா் அருகே அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொருவரும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள கரையிருப்பு பகுதியை சோ்ந்தவா் மூக்கன் (52). தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினரான தனியாா் நிறுவன காவலாளி தங்க கணபதி (50) என்பவரும் கடந்த 20ஆம் தேதி ஒன்றாக மது குடித்தனராம். அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தங்ககணபதியை, மூக்கன் அரிவாளால் வெட்டியதாகவும், தகவலறிந்து வந்த தங்ககணபதியின் சகோதரா் முத்துக்குமரன் (46), மூக்கனை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு மூக்கன் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து தச்சநல்லூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி முத்துக்குமரனை கைது செய்தனா்.

இந்நிலையில் அரிவாள் வெட்டில் காயமுற்ற காவலாளி தங்ககணபதி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com