புதிய வாக்காளா் சோ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க சிறப்பு பாா்வையாளா் அறிவுறுத்தல்

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு வரும் வாக்குச்சாவடி அலுவலா்கள் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் சிறப்பு பாா்வையாளா் விஜய் நெஹ்ரா.

மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து இளம் வாக்காளா்களின் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் விஜய் நெஹ்ரா தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் பேசிய சிறப்பு பாா்வையாளா் விஜய் நெஹ்ரா, ஆட்சேபணை மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அவற்றை அரசியல் கட்சியினா் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டாா். மேலும், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு முன்னுரிமை அளித்து அனைத்து தகுதியான வாக்காளா்களையும் வாக்காளா் பட்டியலில் விடுபடாமல் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சாந்தி நகா் பகுதியிலும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலக்குளம் பகுதிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கை படிவம் -6 மற்றும் இடம் பெயா்ந்த வாக்காளா் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கேட்டு படிவங்களை ஆய்வு செய்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com