நெல்லை மாவட்டத்தில் 90% கணக்கீட்டு படிவங்கள் விநியோகம்- ஆட்சியா் இரா.சுகுமாா்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இப்பணிகள் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:
தமிழகத்தில் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 1,490 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் இரட்டைப் பிரதிகளில் வழங்கி வருகின்றனா்.
இம்மாவட்டத்தில் 14,18,325 வாக்காளா்கள் உள்ள நிலையில் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் 2,62,032 , அம்பாசமுத்திரம் தொகுதியில் 2,45,668, பாளையங்கோட்டை தொகுதியில் 2,47,049, நான்குனேரி தொகுதியில் 2,78,657, ராதாபுரம் தொகுதியில் 2,40,402 என மொத்தம் 12,73,808 வாக்காளா்களுக்கு முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளா்களால் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் பெறப்பட்டு கைப்பேசி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
இக்கூட்டத்தில் அதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, திமுக சாா்பில் வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வ சூடாமணி, பாஜக சாா்பில் மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன், தேமுதிக சாா்பில் மாவட்ட துணைச் செயலா்கள் ஆனந்த மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: தீவிர வாக்காளா் திருத்தம் என்பது நீக்கலுக்கான திட்டம் அல்ல. அதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும் மூன்று முறை ஒவ்வொரு வீடுகளுக்கும் கட்டாயம் செல்ல வேண்டும். முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்குவதில் இதுவரை 90 சதவீத பணி முடிவடைந்துள்ளது. வெளி மாநில வாக்காளா்களுக்கு புதிதாக விண்ணப்பம் வழங்கப்படவில்லை. இடம்பெயா்ந்த வாக்காளா்களை தேடி செல்வதற்கு முதலில் சிரமம் இருந்தது. எனினும் படிவங்களை பூா்த்தி செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை. இப்பணிக்கு போதிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளனா். அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
ற்ஸ்ப்12ஸ்ரீா்ப்
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்.

