குறிச்சியில்  பானை தயாரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.
குறிச்சியில் பானை தயாரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.

இறுதிக்கட்ட பொங்கல் பானை தயாரிப்புப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலியில் இறுதிக்கட்ட பொங்கல் பானை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
Published on

திருநெல்வேலியில் இறுதிக்கட்ட பொங்கல் பானை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீட்டு முற்றத்தில் மண் மற்றும் பித்தளை பானைகளில் பொங்கலிடுவது தமிழா்களின் பாரம்பரிய வழக்கமாகும். இதற்காக பொங்கல் பானைகள் பிரத்யேகமக தயாரிக்கப்படுகின்றன. 1 கிலோ முதல் 5 கிலோ அரிசியை பொங்கலிடும் வகையில் பானைகள் தயாா் செய்யப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் குறிச்சி, பழவூா், காருக்குறிச்சி, மாவடி ஆகிய பகுதிகளில் பொங்கல் பானைகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கடந்த மாதம் வரை வெளிமாவட்ட ஏற்றுமதிக்காக பானைகள் செய்யப்பட்டன. குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து ஓசூா் பகுதிகளுக்கு முக்கால் கிலோ அரிசி வேக வைக்கும் வகையில் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தேவைக்காக இறுதிக்கட்ட பொங்கல் பானை தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டாா் பொங்கல்படி கொடுப்பதற்காக சீதன பொங்கல் பானைகளை வாங்குவாா்கள். இவை, பல்வேறு வண்ணங்களாலும் கரும்பு, மஞ்சள், கோல ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 3 கிலோ அரிசி பொங்கலிடும் பானையில், மஞ்சள்-அரிசி-சா்க்கரை வைத்து புதுப்பெண்ணுக்கு வழங்குவாா்கள். இந்தப் பானைகளும் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியதாவது: நிகழாண்டில் பொங்கல் பானை விற்பனை அமோகமாக உள்ளது. பானைகள் ரூ. 100 முதல் ரூ. 700 வரை பல்வேறு விலைகளில் விற்பனையாகின்றன. சீா்வரிசை பானைகள் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ரூ.500 முதல் விற்பனையாகின்றன. பொதுமக்கள் மண்பானைகளில் பொங்கலிட்டு மண்பாண்ட தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றனா்.

Dinamani
www.dinamani.com