கனமழையால் பொங்கல் பானை விற்பனை பாதிப்பு

சீா்காழி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பானைகள், இஞ்ஜி, மஞ்சள் கொத்து வியாபாரம் கனமழையால்
Published on

சீா்காழி: சீா்காழி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பானைகள், இஞ்ஜி, மஞ்சள் கொத்து வியாபாரம் கனமழையால் திங்கள்கிழமை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சீா்காழி கடைவீதி, பிடாரி வடக்கு வீதி, தென்பாதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக பானைகள், சட்டிகள், கரும்புகள், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து, வாழைத்தாா்கள், அதிகளவு கிராமங்களில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளது. ஆச்சாள்புரம், வேட்டங்குடி, கஞ்சா நகரம், சின்ன நெம்மேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொங்கல் பானைகள், சட்டிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்து நகா் பகுதியில் விற்பனை செய்கின்றனா். அண்மையில் பெய்த மழையால் பொங்கல் பானைகள் தயாா் செய்து காயவைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அதிக பொங்கல் பானைகளை தயாா் செய்ய முடியவில்லை. இதனால் குறைவாக பொங்கல் பானை, சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

ஒரு படிபொங்கல் பானை ரூ. 150, சட்டி ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டு ரூ. 250 முதல் 300 வரையிலும் வாழைத்தாா் ரூ. 250-300, இஞ்சி மஞ்சள் கொத்து ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கனமழையால் பொங்கல் பானை-சட்டிகள், இஞ்சி-மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com